கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
4.00. அசை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசையா தணுவும் அவனின் றியென்பர்
அசைவெனில் இங்கே அதிர்வெனும் பொருளாம்
அணுக்கள் தனியே அசைதல் அதிர்வெனில்
அணுக்கள் சேர்ந்தே அதிர்வொரு மித்தே
குணத்தில் மூலக் கூறென் றசையுமே. ... 1
அசைதல் என்றால் இயங்குதல் எனப்பொருள்
அசையின் இயக்கம் நுடங்கியும் விரிந்தும் ... [நுடங்கியும் = மெலிந்தும்]
இசைந்தே ஒலிக்கும் இதயத் துடிப்பே. ... 2
4.01. யாப்பின் அசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தனித்தே வலிதாய் ஒலிக்கும் எழுத்துகள்
கனித்துச் சீராய் ஒலிப்பது அசையாம்.
அசையே செய்யுளின் தனிமம் ஆகுமே. ... 1
(இணைக்குறள் ஆசிரியப்பா)
தனிநின் றொலிக்கும் எழுத்துகள் பலவும்
நனிசேர்ந் தொலிப்பதில் எழுந்திடும் ஓசை
அசையெனச் செய்யுளில் அடிப்படை உறுப்பாய்
இசைந்தே சீர்களில் இணைந்தும்
தளைகளில் தழைத்தும்
தொடைகளில் தொடுத்தும்
செழிக்கும் யாப்பில் செய்யுளாய் மிளிர்ந்தும்
இழைந்தே ஒலிக்க எழுந்திடும் கவிதையே. ... 2
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஒன்றோ பலவோ எழுத்துகள் சேர்ந்தே
ஒன்றாய் ஒலித்தல் அசையெனப் படுமே
ஒன்றோ பலவோ அசைகள் சேர்ந்தே
ஒன்றாய் ஒலித்தல் சீரெனப் படுமே
ஒன்றோ பலவோ சீர்கள் இணைந்தே
ஒன்றாய் ஒலிப்பது அடியெனப் படுமே. ... 3
இரண்டோ மேலோ யாப்பில் அடிகள்
திரண்டு வருவது செய்யுள் ஆகுமே
செய்யுளின் ஓசை சீர்களைக் கட்டிச்
செயல்படும் தளையால் செவிகளில் விழுமே.
செய்யுள் படிப்பது உள்ளம் நிற்கச்
செய்யும் எதுகை மோனைத் தொடுப்பே. ... 4
இங்ஙனம் யாத்த செய்யுளின் சொற்களில்
தங்கும் பொருளதன் உயிராய் ஆள்வதில்
பொங்கும் உவகையாய்ப் பூக்கும் கவிதையே. ... 5
4.02. எழுத்தும் அசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுத்துகள் தனியே அசைந்திடும் போது
முழுதாய் ஓசை அவற்றில் ஒலிக்கும்.
எழுத்துகள் சேர்ந்தே அசைந்திடும் போதோ
ஓசைகள் குறையும் வலுவும் பெறுமே. ... 1
’தாஅ’ என்று கேட்கும் போது
தாவெழுத் தோசை முழுவதும் ஒலிக்கும்.
அதுவே ’தார்’என ஆகும் போது
மெய்யுடன் சேர்வதில் ஒலிகள் மழுங்கி
’தா’வெழுத் தோசை சற்றே குறையுமே. ... 2
’குயி’எனச் சொல்லும் போதவ் வெழுத்துகள்
வல்லின மெய்யின ஒலிகள் முரண்படப்
பொருளெது மின்றிக் கேட்கும் அசைந்தே. ... 3
(இணைக்குறள் ஆசிரியப்பா)
அதுவே ’குயில்’எனச் சொல்லும் போதோ
இடையின ஒற்றின் வரவால்
தனிக்குறில் ஓசைகள் இயைந்தே
இறுதி ஒற்றில் அழுத்தம் பெற்றுக்
குயில்கள் பாடும் கூட்டிசை கேட்குமே! ... 4
தனியெழுத் தொன்றும் தானே அசையும்
தனியே வருகிற குறில்நெடில் எழுத்துகள்
தனித்தனி அசையென் றாகிட முடியும்.
தனிவரும் ஒற்றை எழுத்தே
தனிச்சொல் லாகிப் பொருள்தர வரினே
ஓரெழுத் தொருமொழி என்றதை அழைப்பரே. ... 5
(நிலைமண்டில ஆசிரியப்பா)
’தா’வெனில் தருதல் ’பா’வெனில் பாட்டு
’கா’வெனில் சோலை ’பூ’வெனில் மலராம்
’உ’வெனில் சிவனார் ’கு’வெனில் பூமி
’அ’வெனச் சுட்டும் ’தீ’யெனச் சுடுமே
’மா’வெனில் திருமகள் ’ம’வெனில் திருமால்
’யா’வெனும் வினையடிப் பிறந்தது யாப்பே. ... 6
4.03. அசைகளின் தொகையொலி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைகளின் அடிப்படை உயிரொலிக் காலம்
ஒற்றுகள் அசையா தனித்தோ இணைந்தோ.
ஒற்றுடன் உயிரெழுத் தொன்றே சேர்ந்தால்
உயிர்மெய் யாகி மெய்யுயிர் பெறுமே. ... 1
அசைகள் ஒலிக்கும் மாத்திரைக் காலம்
அசையெழுத் துகளின் மாத்திரைத் தொகையாம்
இயற்பா வகையில் இவ்வெழுத் துகளொலி
செயல்படும் எழுத்தின் வகையைப் பொறுத்தே
அளவிற் குறைந்தோ மிக்கோ ஒலிக்குமே. ... 2
கதவு சொல்லில் மூன்றுயிர் மெய்யெனும்
விதத்தில் எழுத்துகள் மாத்திரை மூன்றெனில்
குற்றிய லுகரம் இறுதியில் வருவதால்
குற்றிய லுகரம் மாத்திரை அரையாய்
கதவெனும் சொல்லின் அசைகளில் பயிலும்
தொகையொலி மாத்திரை இரண்டரை யாமே. ... 3
இயற்பா ஆகா இசைப்பாக் களிலே
செயல்படும் அசைகளில் சீர்ப்படும் சந்தம்
தனிக்குறில் மாத்திரை அளவொன் றெனவும்
தனிநெடில், தனிக்குறில் பின்வரும் ஒற்றுடன்
தனிநெடில் பின்வரும் ஒற்றுடன் அளவில்
இரண்டு மாத்திரை என்றிலக் கணமே. ... 4
*****
No comments:
Post a Comment