Friday, September 30, 2016

5.06. நாலசைச் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.06. நாலசைச் சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மூவசைச் சீர்கள் எட்டின் இறுதியில்
நேரசை நிரையசை தனியே சேர
நாலசைச் சீர்வரும் பதினா றெனவே. ... 1

நாலசைச் சீர்பதி னாறில் அமையும்
தண்பூ நான்கு நறும்பூ நான்கு
தண்ணிழல் நான்கு நறுநிழல் நான்கே. ... 2

நாலசைச் சீர்கள் அமைவதை அறிய
ஈரசைச் சீர்கள் எட்டின் பின்னே
தண்பூ நறும்பூ தண்ணிழல் நறுநிழல்
குறிகள் சேர்ந்து வருவது புலப்படும். ... 3

நேரில் முடியும் எட்டு சீர்களும்
பூச்சீர் என்றே அழைக்கப் படுவது.
நிரையில் முடியும் மீதம் எட்டும்
நிழற்சீர் என்றே அழைக்கப் படுவது.
நான்கசைச் சீர்கள் அருகியே வருமே. ... 4

(ஆசிரியத் தாழிசை)
தேமாந்தண்பூ புளிமாந்தண்பூ கருவிளந்தண்பூ கூவிளந்தண்பூ
தேமாநறும்பூ புளிமாநறும்பூ கருவிளநறும்பூ கூவிளநறும்பூ
என்பன பூச்சீர் வாய்பா டாமே. ... 5

இந்தக் குறிகளின் பூச்சீர் வகையாம்
நேர்நேர்நேர்நேர் நிரைநேர்நேர்நேர் நிரைநிரைநேர்நேர் நேர்நிரைநேர்நேர்
நேர்நேர்நிரைநேர் நிரைநேர்நிரைநேர் நிரைநிரைநிரைநேர் நேர்நிரைநிரைநேர் ... 6

தேமாந்தண்ணிழல் புளிமாந்தண்ணிழல் கருவிளந்தண்ணிழல் கூவிளந்தண்ணிழல்,
தேமாநறுநிழல் புளிமாநறுநிழல் கருவிளநறுநிழல் கூவிளநறுநிழல்
என்பன நிழற்சீர் வாய்ப்பா டாமே. ... 7

இந்தக் குறிகளின் நிழற்சீர் வகையாம்
நேர்நேர்நேர்நிரை நிரைநேர்நேர்நிரை நிரைநிரைநேர்நிரை நேர்நிரைநேர்நிரை
நேர்நேர்நிரைநிரை நிரைநேர்நிரைநிரை நிரைநிரைநிரைநிரை நேர்நிரைநிரைநிரை ... 8

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெண்பா ஒழிந்த பிறபாக் களிலே
பொதுப்பட வந்து நிற்பத னாலே
பொதுச்சீர் என்பது நாலசைச் சீரே. ... 9

பொதுவெனும் சொல்லிவண் பொதுசனம் போலச்
சிறப்பிலா எளிமை எனும்பொருள் படுமே
இதனால் நாலசைச் சீர்கள் செய்யுளில்
சிறப்பிலை யெனவே அருகி வருமே. ... 10

நாலசைச் சீர்களை அலகிடும் போது
பூச்சீர் எட்டும் காய்ச்சீர் எனவும்
நிழற்சீர் எட்டும் கனிச்சீர் எனவும் 
கொண்டல கிட்டுத் தளைகளைக் குறிப்பரே. ... 11

(இணைக்குறள் ஆசிரியப்பா)
சான்றாய் ’வடிவார்கூந்தல் மங்கையரும்’ என்பது
போன்ற தொடர்களை அலகிடும் போது
வடி/வார்/கூந்/தல் மங்/கைய/ரும்
புளிமாந்தண்பூ கூவிளங்காய் என்றுவரும் சீர்களை
புளிமாங்காய் கூவிளங்காய் என்றே கொண்டு
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை
என்றே தளைதனைக் காணுதல் வேண்டுமே. ... 12

(கலித்தாழிசை)
’அங்கண்வானத் தமரரசரும்’ அலகிட 
அங்/கண்/வா/னத் தம/ரர/சரும் என்று
தேமாந்தண்பூ கருவிளங்கனி யாவது
தேமாங்காய் கருவிளங்கனி என்றே கருதக்
காய்முன் நிரைவரும் கலித்தளை பயிலுமே. ... 13

’வெங்கண்வினைப்பகை விளிவெய்த’ அலகிட
வெங்/கண்/வினைப்/பகை விளி/வெய்/த
தேமாநறுநிழல் புளிமாங்காய் என்னும் சீர்களைத்
தேமாங்கனி புளிமாங்காய் என்றே கருதக்
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித் தளையாம். ... 14

’அந்தரதுந்துபி நின்றியம்ப’ அலகிட
அந்/தர/துந்/துபி நின்/றியம்/ப
கூவிளந்தண்நிழல் கூவிளங்காய் என்னும் சீர்களைக்
கூவிளங்கனி கூவிளங்காய் என்றே கருதக்
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித் தளையாம். ... 15

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வஞ்சிப் பாவினில் பொதுச்சீர் வரலாம்
வெண்பா தன்னில் வருதலா காது
குற்றுகரம் வந்தால் ஒழியப் பொதுச்சீர்
அகவல் கலியெனும் பாக்களில் வராதே. ... 16

பூச்சீர் நிழற்சீர் அமைந்த சொற்றொடர்கள்:
(குறள் வெண்செந்துறை)
வாவாவென்று வருவாயென்று தெரிவதுகாண்பாய் கண்டதுகாண்பாய்
வாவாவெனச்சொல் வருவாயெனச்சொல் தெரிவதென்றுசொல்வாய் கண்டதுகொடுப்பாய் ... 17

வாவாவந்துபார் வருவாய்வந்துபார் தெரிவதுவந்துபார் கண்டதுவந்துபார்
பூவாய்வருவது வருவாய்வருவது தெரிவதுவருவது கண்டதுவருவது ... 18

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இப்படிச் சொற்களை முயன்றமைத் தாலும்
இவைபோல் வந்திடும் சொற்கள் பிரிந்திட
நாலசை அமைவது அரிதெனப் புரியுமே. ... 19

*** *** ***

5.05. மூவசைச் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.05. மூவசைச் சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஈரசைச் சீர்கள் நான்கின் இறுதியில்
நேரசை நிரையசை தனியே சேர்ந்தே
மூவசைச் சீர்கள் எட்டென வருமே. ... 1

ஈரசை இறுதியில் நேரசை சேரும்
மூவசைச் சீர்கள் நான்கும் காய்ச்சீர்
ஈரசை இறுதியில் நிரையசை சேரும்
மூவசைச் சீர்கள் நான்கும் கனிச்சீர். ... 2

தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்
என்பன காய்ச்சீர் வாய்பா டாமே
நேரசை யாகும் காய்-எனும் சொல்லே 
ஈரசை வாய்பா டிறுதியிற் காண்க. ... 3

இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர்
எனவரும் நால்வகை காய்ச்சீர் வகைகளே. ... 4

(குறள் வெண்செந்துறை)
தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி
என்பன கனிச்சீர் வாய்பா டாமே. ... 5

நிரையசை யாகும் கனி-எனும் சொல்லே 
ஈரசை வாய்பா டிறுதியிற் காண்க. ... 6

நேர்நேர்நிரை நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நேர்நிரைநிரை
எனவரும் நால்வகை கனிச்சீர் வகைகளே. ... 7

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெண்பாக் குரியதால் காய்ச்சீர் நான்கும் 
வெண்சீர் வெண்பா வுரிச்சீர் என்று
மேலும் இரண்டு பெயர்கள் பெறுமே. ... 8

வஞ்சிப் பாவரும் கனிச்ச்சீர் நான்கும்
வஞ்சிச்சீர் வஞ்சி யுரிச்சீர் என்று
மேலும் இரண்டு பெயர்கள் பெறுமே. ... 9

தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு தென்கிழக்கு
பொன்னாக்கும் பொருளாக்கும் பொருள்பெருக்கும் பொன்பெருக்கும்
என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களில்
காய்ச்சீர் அனைத்தும் முறையே காண்க. ... 10

(குறள் வெண்செந்துறை)
பூவாழ்பதி திருவாழ்பதி திருவுறைபதி பூவுறைபதி
மீன்வாழ்துறை சுறவாழ்துறை சுறமறிதுறை மீன்மறிதுறை ... 11

என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களிலே
கனிச்சீர் அனைத்தும் முறையே காண்க.
[சுற=சுறா மறி=திரிதல் துறை=நீர்த்துறை] ... 12
--பசுபதி, ’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.49

காய்கனிச் சீர்களுக் கின்றைய வழக்கில்
டீவீபார் சினிமாபார் நகைக்கடைபார் சீரியல்பார் ... 13

ஜூவீபடி குமுதம்படி தினமலர்படி பாடமும்படி
போன்ற சான்றுகள் அறிந்து மகிழலாம். ... 14

(குறள் வெண்பா)
காய்ச்சீராம் வெண்பா வுரிச்சீர் களேவரும்
கீழ்வரும் வெண்பா விலே. ... 15

(இன்னிசை அளவியல் வெண்பா)
ஆராரோ ஆரிரரோ ஐயாநீ கண்ணுறங்கு
ஆராரோ பேசினாலும் ஐயாவுன் கண்மூடு
நான்தூளி ஆட்டுவதில் நன்றாய்நீ கண்ணுறங்கு
நான்நின்றே தூங்குமுன்நீ தூங்கு! ... 16

தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் காசு ... 17

வஞ்சியுரிக் கனிச்சீரே வந்துநிற்கும் சான்றெனவே
வஞ்சிப்பா அடிகள்கீழ் வருவதனைக் கண்டறிக. ... 18

(குறளடி வஞ்சிப்பாவின் பகுதி) 
பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவியலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மண்முரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும் ... 19
--யா.கா. மேற்கோள்

தேமாங்கனி கூவிளங்கனி
கூவிளங்கனி கூவிளங்கனி
கருவிளங்கனி கருவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்கனி
கருவிளங்கனி கூவிளங்கனி
புளிமாங்கனி புளிமாங்கனி ... 20

*****

5.04. ஈரசைச் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.04. ஈரசைச் சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேர்நிரை யெனவரும் அசைகள் கூடி
ஈரசைச் சீர்வரும் வழிகள் நான்காம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
ஈரசைச் சீர்கள் இங்ஙனம் நான்கே. ... 1

ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கில்
மாச்சீர் இரண்டு விளச்சீர் இரண்டு.
ஈற்றசை நேர்வரின் மாச்சீர் ஆகும்
ஈற்றசை நிரைவரின் விளச்சீர் ஆகுமே. ... 2

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்பது ஈரசைச் சீர்வாய் பாடாம்.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
என்னும் நால்வகை ஈரசைச் சீர்களே
சீரின் அசைநிரல் பெயரே சுட்டுமே. ... 3

அனைவரும் அறிந்த மரங்கள் அவற்றில்
விளைந்திடும் பூக்கள் காய்கள் கனிகளை
அழைத்திடும் பெயர்களைச் சீர்களுக் கிட்டனர். ... 4
---கி.வா.ஜ. ’கவி பாடலாம்’

தேமா என்பது பழுக்கும் மாங்காய்
புளிமா என்பது ஊறுகாய் மாங்காய்
கருவிளம் என்பது விளாமர மாகும்
கூவிளம் என்பது வில்வ மரமே. ... 5

அகவற்சீர் இயற்சீர் ஆசிரிய வுரிச்சீர்
எனவும் ஈரசைச் சீர்பெயர் பெறுமே.
செய்யுள் வழக்கில் பேச்சின் வழக்கில்
பெரிதும் இயல்பாய்ப் பயின்று வருதலால்
இயற்சீர் என்ற பெயரில் வருமே. ... 6

அகவல் ஓசை தாங்கி வருவதால்
அகவற் சீரெனும் பெயரில் வருமே.
அகவல் பயிலும் ஆசிரியப் பாவிற்
குரிய சீரென் றாகும் இதுவே
ஆசிரி யவுரிச் சீரெனப் படுமே. ... 7

இயற்சீர் மட்டுமே அமைந்த குறளிது:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ... 8

இந்தக் குறளை அலகிட வருவது
கூவிளம் கூவிளம் கூவிளம் புளிமா
புளிமா புளிமா மலர்-என அறிக. ... 9

*****

Wednesday, September 28, 2016

5.02. சீர் வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.02. சீர் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரசை நிரையசை பல்வகை இணைந்தே
ஓரசை முதலாய் நாலசை வரையில்
உருப்பெறும் சீர்களில் அதிகம் பயில்வன
ஈரசை மூவசை; நாலசை அரிதே. ... 1

சீர்களின் வகைகளை நினைவிற் கொள்ளச்
சீரசை நிரலைக் குறிக்கும் பேரெனும்
சீர்வாய் பாடுகள் திறம்பட உதவுமே. ... 2

சீர்வகைப் பெயர்தன் அசை-தொகை பொறுத்து
ஓரசை ஈரசை மூவசை நாலசை
என்றே நால்வகைப் பெயர்பெறு மாயினும்
செய்யுட் குரிமை பூண்டு நிற்கும்
திறமும் பிறவும் நோக்கி யவற்றை
அசைச்சீர் அகவற்சீர் வெண்சீர் வஞ்சிச்சீர்
பொதுச்சீர் என்றும் ஐவகைப் பெயர்களில்
அழைப்பது செய்யுள் வழக்கினில் அமையுமே. ... 3

அசைச்சீர் என்பது ஓரசைச் சீரே
அகவற் சீரெலாம் ஈரசை வகைகளே
வெண்சீர் என்பது மூவசைக் காய்ச்சீர்
வஞ்சிச் சீர்வகை மூவசைக் கனிச்சீர்
பொதுச்சீர் என்பது நாலசைச் சீர்களே. ... 4

5.03. ஓரசைச் சீர்
(ஆசிரியத் தாழிசை)

அசையொன்று தனிச்சீராய் இசைநிறைக்க வருவதே
அசைச்சீர் என்னும் ஓரசைச் சீராம்.
அசைச்சீர் இரண்டே தனிநேர் தனிநிரை. ... 1

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைச்சீர் பெரிதும் வெண்பா ஈற்றிலும்
கலிப்பா அம்போ தரங்க ஈற்றிலும்
வஞ்சி விருத்தம் இடையிலும் வருமே. ... 2

நாள்-எனும் மலர்-எனும் இருபெயர் களிலும்
காசு பிறப்பு எனும்பெயர் களிலும்
ஓரசைச் சீரின் வாய்பா டமையுமே. ... 3

நாள்-மலர் காசு பிறப்பு பெயர்பெறும்
குறிகளை ஆய்ந்தால் கிடைக்கும் அசைகள்
தனிநேர் தனிநிரை நேர்பு நிரைபு
என்னும் நால்வகை ஓரசைச் சீர்களே.
வெண்பா ஈற்றடி இறுதிச் சீரென
இவற்றில் ஒன்று மட்டும் வருமே. ... 4

காசு பிறப்பு ஓரசைச் சீர்களே.
தனிக்குறில் தவிர மற்ற நேருடன்
குற்றிய லுகரம் சேர்ந்தால் நேர்பு
நிரையுடன் சேர்குற் றுகரம் நிரைபு. ... 5

தனிநேர் அசைச்சீர் நாள்-எனப் படுமே
தனிநிரை அசைச்சீர் மலர்-எனப் படுமே
தனிக்குறில் அல்லா நேரசை யுடனே
குற்றிய லுகரம் சேர்வது காசு
நிரையுடன் அதுவே சேர்வது பிறப்பு. ... 6

அது-எனும் சொல்லசை நேர்பா மலரா?
து-எனும் எழுத்துகுற் றுகர மாயினும்
அ-வெனும் எழுத்து தனிக்குறி லாகிட
அதுவெனும் அசைச்சீர் தனிநிரை யாகி
மலரெனக் குறிக்கும் வாயா டாமே. ... 7

மாசு என்பதில் குற்றிய லுகரம்
மாவெனும் தனிநெடி லுடனே சேர்வதால்
காசு வாய்பா டினிலே வருமே. ... 8

பந்து என்பதன் வாய்பா டென்ன?
பந்து என்பதில் பந்-எனும் நேரசை
குறில்பின் ஒற்றால் தனிக்குறி லன்று
குற்றுகரம் சேரக் காசு ஆகுமே. ... 9

உவர்-எனும் தனிநிரை அசைச்சீர் மலரே
உவர்ப்பு-எனும் சொல்லாய் வந்தால் அதுவே
உவர்-உடன் சேரும் குற்றுக ரத்தால்
பிறப்பு வாய்பா டாகி வருமே. ... 10

(சிந்தியல் வெண்பா)
நாள்-இல் முடிவது இந்தக் குறட்பா:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர்-இல் முடிவது இந்தக் குறள்வெண்பா:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

காசு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறப்பு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

*****

5.00. சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.00. சீர்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எத்தனை பொருட்கள் சீரெனும் சொலுக்கு!
அத்தனை யெனவரும் சீரெனும் உறுப்பே
நேரடி யாகவோ மறைமுக மாகவோ. ... 1

செய்யுளின் கட்புலன் உறுப்பெனச் சீரே!
செய்யுள் என்பதோர் செடியெனக் கண்டால்
செடியின் இலைகளே சீர்கள் என்போம்
செடியின் பூக்களே இலைமறைத் தொடைகளாம் 
அடிகளாய்க் கிளைகளே ஆகி வந்திட
அடிமிசை இணையும் காம்பே தளைகளாம். ... 2

[கட்புலன்=கண்ணுக்குச் சட்டெனத் தெரியும்; 
தொடை=எதுகை, மோனை போன்றவை]

செடியில் இலையே கட்புலன் உறுப்புபோல்
செய்யுளில் சீரே கட்புலன் உறுப்பாம்
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
முன்வரும் கட்புலன் இவ்வடிச் சீர்களே. ... 3

சீரே செய்யுளின் செல்வம் அழகு
சீரே செய்யுளின் நன்மை பெருமை
சீரே செய்யுளின் மதிப்பும் புகழும்
என்பது கீழ்வரும் செய்யுளில் புரியுமே. ... 4

(நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

சீர்களே மேலுள பாப்பொற் காசு 
சீர்களின் அமைப்பு பாவின் அழகு
சீர்களின் கருத்து பாவின் நன்மை
சீர்களே பாவின் மதிப்பிலே புகழிலே. ... 5

சீர்களே பெரிதும் செய்யுளின் இயல்பில்
சீர்களே துலாமென ஓசையை நிறுக்கும் 
சீர்களின் அளவில் தாளமும் பாட்டும்
ஓர்வகை யாகி ஓசையில் ஓங்குமே. ... 6

இன்னும் செய்யுளின் நேர்மை சமன்பாடு
செம்பொருள் உறுதி ஆயுதம் தண்டை
என்னும் பொருள்களும் சீரினில் அடக்கம்.

(குறள் வெண்செந்துறை)
காரணித்துக் காதலித்துநம் முன்னோர் இட்டபேர்
ஆரணிய மாய்விரியும் யாப்புறுப் புகளிலே. ... 7

5.01. சீரென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஓசை லயம்பட நிற்க உதவும்
செய்யுளின் உறுப்பு சீரெனப் படுமே.
அசைகள் தனித்தோ தொடர்ந்தோ வருவதில்
இசைந்தே ஒலிக்கும் சீரெனும் உறுப்பிலே. ... 1

நச்சினார்க் கினியர் கலித்தொகை உரையில்
தாளம் என்பதில் மூன்றென உறுப்புகள்
தாளக் காற்சுழல் பாணியில் தொடங்குமே 
தாள நீடிப்பு தூக்கினில் அடங்குமே
தாள முடிவு சீரினில் அடங்குமே
என்றே சீரினைப் பாணியோ டியைப்பரே. ... 2

[காற்சுழல் = காலச்சுழல்]

சீரின் எல்லை சொல்லில் முடியலாம்
சீரின் எல்லையில் சொற்பிளந்து வரலாம்
சீர்வரும் பிளவு வகையுளி யெனப்படும்.
சீரிசை நோக்கிச் சொற்பொருள் நோக்காது
நேர்வரும் ஓசையே சொற்களைப் பிரிக்குமே. ... 3

(குறள் வெண்பா)
வருகிற பாக்குறளில் ’வேண்டுதல்வேண் டாமை’
பிரியும் வகையுளி யென்று. ... 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

வகையுளி இல்லாக் குறளெனக் கேட்பின்
அகர முதல உளது. ... 5

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

*****

Wednesday, September 21, 2016

4.04. அசை வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.04. அசை வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அசையின் வகைகள் ஆகும் இரண்டு
நேரசை நிரையசை அவற்றின் பெயராம்
நேரே தனியே வருவதால் நேரசை
ஓரெழுத் தால்வரும் நேரசை வகையே. ... 1

ஒன்றை யொன்று தொடர்வது நிரையாம்
எழுத்துகள் இரண்டு தொடர்ந்து வரின்-அவை
இணைந்தே அசைவதால் நிரையசை யாமே. ... 2

குறிலோ நெடிலோ தனித்தும்-ஒற் றடுத்தும்
வருவது நேரசை எனும்பெயர் பெறுமே
குறில்கள் இரண்டோ குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும்-ஒற் றடுத்தும் வந்தால் நிரையசை.
ஒற்றடுத் தென்பது குறில்-நெடில் பின்னோர்
ஒற்றுடை மெய்யெழுத் துவரல் குறிக்குமே. ... 3

4.05. நேரசை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரசை அமையும் வகைகள் நான்கே
ஒருகுறில் தனித்து வந்தால் நேரசை
ஒருகுறில் ஓற்றடுத் துவந்தால் நேரசை
ஒருநெடில் தனித்து வந்தால் நேரசை
ஒருநெடில் ஓற்றடுத் துவந்தால் நேரசை. ... 1

’இ,இல்; க,கல்;’ குறில்களின் நேரசை;
’ஆ,ஆல்; பா,பால்;’ நெடில்களின் நேரசை.
’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க. ... 2

தனிக்குறில் நேரசை பெரிதும் சீரின் 
இறுதியில் வருவதே: ’பானு, வாலி’.
விட்டிசைத் தல்லால் முதற்கண் தனிக்குறில்
ஒட்டப் படாது நேரிசை யென்றே
யாப்ப ருங்கலம் வரையறை சொலுமே.
’அஎ உஅம் மூன்றுஞ் சுட்டு’
என்னும் தொடரில் சீர்முதல் தனிக்குறில்
நின்றே தனியாய் ஒலிப்பது விட்டிசை
சீர்முதல் விட்டிசைத் தனிக்குறில் நேரசை. ... 3

ஒற்றுகள் இரண்டாய் ஒன்றன் பின்னே
ஓரெழுத் தடுத்தே வரின்-அவ் வொற்றுகள்
தனியசை யாகா முன்னுள எழுத்துடன்
இணைந்தே நேரோ நிரையோ ஆகுமே. ... 4

’அர்த்தம், பார்த்தன்’ நேர்நேர் ஆகுமே
’பார்ப்பதில் ஆழ்ந்தொரு’ நேர்நிரை ஆகுமே
’படர்க்கை தமிழ்த்தாய்; நிரைநேர் ஆகுமே
’படர்ந்திடும் தமிழ்த்திரு’ நிரைநிரை ஆகுமே. ... 5

4.06. நிரையசை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நிரையசை அமையும் வகைகள் நான்கே
குறில்கள் இரண்டு வந்தால் நிரையசை
குறிலிணை ஓற்றடுத் துவந்தால் நிரையசை
குறில்நெடில் இணைந்து வந்தால் நிரையசை
குறில்நெடில் ஓற்றடுத் துவந்தால் நிரையசை. ... 1

’அணி,கனா’ குறிலிணை, குறில்நெடில் நிரையசை.
’அணில்,சவால்’ குறிலிணை, குறில்நெடில் ஒற்றடுடன்.
’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க. ... 2

ஒற்றிலா நேரசையில் ஓரெழுத் திருக்குமே
ஒற்றிலை யென்றால் முதல்வரும் நெடிலே.
’உமா’ என்பது குறில்நெடில் நிரையசை
’மாவு’ நெடில்குறில் தனித்திரு நேரசை. ... 3

4.07. அசையும் சொல்லும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சொல்லின் பகுதியே பொதுவில் வரினும்
சொற்களும் அசைதனில் முழுதாய் வருமே
சொல்லொன் றெனவே இரண்டிலும் வரலாம்
பல்-பால் ஒருசொல் நேரசைச் சான்றெனில்
பழம்-மலர் ஒருசொல் நிரையசைச் சான்றே. ... 1

தனிக்குறில் நேரசை இறுதியில் வருவதால்
தனியே பொருளது தராது நின்றே
ஒற்றுடன் சேர்ந்தால் பொருள்தர வருமே
’பல்லி’ எனும்சொல் நேர்நேர் ஆவதில்
’பல்’லெனும் நேரசை ஒற்றால் பொருள்பெறும்
’லி’யெனும் நேரசைப் பொருளெது மில்லை. ... 2

தனிநெடில் நேரசை பொருள்தர வரலாம்
தனிநெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’தா-பால்’ என்னும் சொற்கள் சான்றே. ... 3

குறிலிணை நிரையசை பொருள்தர வரலாம்
குறிலிணை ஒற்றுடன் பொருள்தர வரலாம்
அணி-அணில் என்னும் சொற்கள் சான்றே. ... 4

குறில்நெடில் நிரையசை பொருள்தர வரலாம்
குறில்நெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’உமா-இறால்’ என்னும் சொற்கள் சான்றே. ... 5

நேரசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவது பொதுவில் காண்பதே
’என்/ன கே/ளாய்’ எனும்தொடர் சான்றே. ... 6

நிரையசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவதும் பொதுவில் காண்பதே
’வரு/வினை அறுப்/பதால்’ எனும்தொடர் சான்றே. ... 7

--ரமணி, மீள்பார்வை: 19/09/2016

*****

4.00. அசை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.00. அசை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அசையா தணுவும் அவனின் றியென்பர்
அசைவெனில் இங்கே அதிர்வெனும் பொருளாம்
அணுக்கள் தனியே அசைதல் அதிர்வெனில்
அணுக்கள் சேர்ந்தே அதிர்வொரு மித்தே
குணத்தில் மூலக் கூறென் றசையுமே. ... 1

அசைதல் என்றால் இயங்குதல் எனப்பொருள்
அசையின் இயக்கம் நுடங்கியும் விரிந்தும் ... [நுடங்கியும் = மெலிந்தும்]
இசைந்தே ஒலிக்கும் இதயத் துடிப்பே. ... 2

4.01. யாப்பின் அசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தனித்தே வலிதாய் ஒலிக்கும் எழுத்துகள்
கனித்துச் சீராய் ஒலிப்பது அசையாம்.
அசையே செய்யுளின் தனிமம் ஆகுமே. ... 1

(இணைக்குறள் ஆசிரியப்பா)
தனிநின் றொலிக்கும் எழுத்துகள் பலவும்
நனிசேர்ந் தொலிப்பதில் எழுந்திடும் ஓசை
அசையெனச் செய்யுளில் அடிப்படை உறுப்பாய்
இசைந்தே சீர்களில் இணைந்தும் 
தளைகளில் தழைத்தும் 
தொடைகளில் தொடுத்தும்
செழிக்கும் யாப்பில் செய்யுளாய் மிளிர்ந்தும்
இழைந்தே ஒலிக்க எழுந்திடும் கவிதையே. ... 2

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஒன்றோ பலவோ எழுத்துகள் சேர்ந்தே
ஒன்றாய் ஒலித்தல் அசையெனப் படுமே
ஒன்றோ பலவோ அசைகள் சேர்ந்தே
ஒன்றாய் ஒலித்தல் சீரெனப் படுமே
ஒன்றோ பலவோ சீர்கள் இணைந்தே
ஒன்றாய் ஒலிப்பது அடியெனப் படுமே. ... 3

இரண்டோ மேலோ யாப்பில் அடிகள்
திரண்டு வருவது செய்யுள் ஆகுமே
செய்யுளின் ஓசை சீர்களைக் கட்டிச்
செயல்படும் தளையால் செவிகளில் விழுமே.
செய்யுள் படிப்பது உள்ளம் நிற்கச்
செய்யும் எதுகை மோனைத் தொடுப்பே. ... 4

இங்ஙனம் யாத்த செய்யுளின் சொற்களில்
தங்கும் பொருளதன் உயிராய் ஆள்வதில்
பொங்கும் உவகையாய்ப் பூக்கும் கவிதையே. ... 5

4.02. எழுத்தும் அசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுத்துகள் தனியே அசைந்திடும் போது
முழுதாய் ஓசை அவற்றில் ஒலிக்கும்.
எழுத்துகள் சேர்ந்தே அசைந்திடும் போதோ
ஓசைகள் குறையும் வலுவும் பெறுமே. ... 1

’தாஅ’ என்று கேட்கும் போது
தாவெழுத் தோசை முழுவதும் ஒலிக்கும்.
அதுவே ’தார்’என ஆகும் போது
மெய்யுடன் சேர்வதில் ஒலிகள் மழுங்கி
’தா’வெழுத் தோசை சற்றே குறையுமே. ... 2

’குயி’எனச் சொல்லும் போதவ் வெழுத்துகள்
வல்லின மெய்யின ஒலிகள் முரண்படப்
பொருளெது மின்றிக் கேட்கும் அசைந்தே. ... 3

(இணைக்குறள் ஆசிரியப்பா)
அதுவே ’குயில்’எனச் சொல்லும் போதோ
இடையின ஒற்றின் வரவால்
தனிக்குறில் ஓசைகள் இயைந்தே
இறுதி ஒற்றில் அழுத்தம் பெற்றுக்
குயில்கள் பாடும் கூட்டிசை கேட்குமே! ... 4

தனியெழுத் தொன்றும் தானே அசையும்
தனியே வருகிற குறில்நெடில் எழுத்துகள்
தனித்தனி அசையென் றாகிட முடியும்.
தனிவரும் ஒற்றை எழுத்தே
தனிச்சொல் லாகிப் பொருள்தர வரினே
ஓரெழுத் தொருமொழி என்றதை அழைப்பரே. ... 5

(நிலைமண்டில ஆசிரியப்பா)
’தா’வெனில் தருதல் ’பா’வெனில் பாட்டு
’கா’வெனில் சோலை ’பூ’வெனில் மலராம்
’உ’வெனில் சிவனார் ’கு’வெனில் பூமி
’அ’வெனச் சுட்டும் ’தீ’யெனச் சுடுமே
’மா’வெனில் திருமகள் ’ம’வெனில் திருமால் 
’யா’வெனும் வினையடிப் பிறந்தது யாப்பே. ... 6

4.03. அசைகளின் தொகையொலி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அசைகளின் அடிப்படை உயிரொலிக் காலம்
ஒற்றுகள் அசையா தனித்தோ இணைந்தோ.
ஒற்றுடன் உயிரெழுத் தொன்றே சேர்ந்தால்
உயிர்மெய் யாகி மெய்யுயிர் பெறுமே. ... 1

அசைகள் ஒலிக்கும் மாத்திரைக் காலம்
அசையெழுத் துகளின் மாத்திரைத் தொகையாம்
இயற்பா வகையில் இவ்வெழுத் துகளொலி
செயல்படும் எழுத்தின் வகையைப் பொறுத்தே
அளவிற் குறைந்தோ மிக்கோ ஒலிக்குமே. ... 2

கதவு சொல்லில் மூன்றுயிர் மெய்யெனும்
விதத்தில் எழுத்துகள் மாத்திரை மூன்றெனில்
குற்றிய லுகரம் இறுதியில் வருவதால்
குற்றிய லுகரம் மாத்திரை அரையாய்
கதவெனும் சொல்லின் அசைகளில் பயிலும்
தொகையொலி மாத்திரை இரண்டரை யாமே. ... 3

இயற்பா ஆகா இசைப்பாக் களிலே
செயல்படும் அசைகளில் சீர்ப்படும் சந்தம்
தனிக்குறில் மாத்திரை அளவொன் றெனவும்
தனிநெடில், தனிக்குறில் பின்வரும் ஒற்றுடன்
தனிநெடில் பின்வரும் ஒற்றுடன் அளவில் 
இரண்டு மாத்திரை என்றிலக் கணமே. ... 4

*****

Friday, September 16, 2016

3.18. ஐகாரக் குறுக்கம்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.18. ஐகாரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஐ-யெனும் உயிர்மொழி தனித்தே வந்தால்
இருமாத் திரையள வாக ஒலிக்கும்.
அதுவே மற்ற எழுத்துகள் சேர்ந்து
முதலிடை கடையில் வந்த போது
ஒருமாத் திரையாகக் குன்றி ஒலிப்பதே
ஐகாரக் குறுக்கம் எனும்பெயர் பெறுமே. ... 1

ஐயெனும் நெடிலே அய்யென் பதுபோல்
சொல்முதல் ஒலியில் ஒன்றரை மாத்திரை
சொல்லிடை கடையில் ஒருமாத் திரையாம்.. ... 2

ஐப்பசி, வைகல் முதல்-ஐ குறுகும்
தலைவன், இறைவன் இடை-ஐ குறுகும்
மழை-மலை நகை-கடை கடை-ஐ குறுகும்
இவை-ஐ காரக் குறுக்கமென் அறிகவே. ... 3

நசைஇ அசைஇ அளபெடைச் சொற்களில்
ஐகா ரம்கொளும் இருமாத் திரையாம்
இகரம் கொள்ளும் ஒரு மாத்திரையே. ... 4

3.19. ஔகாரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஔ-வெனும் உயிர்மொழி தனித்தோ அல்லது
தனித்து நிற்கும் உயிர்மெய் யாகவோ
தன்னை உணர்த்தி வருகிற போதும்
அளபெடை யாகி வருகிற போதும்
தன்னிரு மாத்திரை குன்றா தொலிக்குமே. ... 1

ஔ-எனும் தனிச்சொல் அழைத்தல் பொருளாம்
கௌ-எனும் ஔ-சேர் உயிர்மெய் கொள்ளும்
ஔஉ என்பது அளபெடை யாமே
இங்ஙனம் ஔ-வரின் முழுதாய் ஒலிக்குமே. ... 2

உயிரெழுத் துயிர்மெய் பின்வரும் ஔ-எனில்
முதலில் மட்டுமே நிற்கும் ஔ-வென
ஓசையில் குறைந்து மாத்திரை யளவு
ஒன்றரை அல்லது ஒன்றென ஒலித்தே
ஔகாரக் குறுக்கம் ஆகி விடுமே. ... 3

ஔவெனும் நெடிலே அவ்வென் பதுபோல்
சொல்லின் முதலில் நின்றே ஒலித்தால்
ஔகாரக் குறுக்கமாய் ஒன்றரை மாத்திரை
அளவில் ஒலிக்கும் என்றுளம் கொள்வீர்
ஔவை வௌவால் கௌதாரி சான்றே. ... 4

3.20. மகரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ணகர னகர மெய்களின் முன்னும்
வகரம் பின்னும் வருகிற மகரம்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது மகரக் குறுக்கம் என்பதே. ... 1

கேண்ம்-எனும் சொற்பொருள் கேளும் ஆகும்
போன்ம்-எனில் போலும் சென்ம்-எனில் செல்லும்
மருண்ம்-எனில் மருளும் போன்ம்-எனில் போலும்
என்பன தனிமொழி மகரக் குறுக்கமே. ... 2

வரும்-வண்டி தரும்-வளவன் வாழும்-வழி வளம்-வரும்
என்றே வகரம் பின்வரும் மகரம்
புணர்மொழி மகரக் குறுக்கம் ஆமே. ... 3

3.21. ஆய்தக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

லகர ளகர ஈற்றுப் புணர்ச்சியால்
ஆய்தம் தோன்றி இருபுறத் தொடர்பால்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பதே ஆய்தக் குறுக்கம் என்பதாம். ... 1

அல்+திணை சேர அஃறிணை ஆய்தமும்
கல்+தீது சேர கஃறீது ஆய்தமும்
முள்+தீது சேர முஃடீது ஆய்தமும்
கால்மாத் திரையொலி ஆய்தக் குறுக்கமே. ... 2

[சார்பெழுத்து வகைகளின் மாத்திரை விவரம் காண: 3.01. மாத்திரை]

3.22. எழுத்தும் மற்ற உறுப்புகளும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுத்தெனப் படுவது தனியெழுத் தாக
மொழியெனும் மாளிகை யெழுப்பும் கற்களாய்
ஒற்றை ஒலியின் தனிமம் எனவே
கற்றையாய்ச் சேர்ந்தே சொல்லென் றாகி
மனதில் உள்ளதை வாக்கில் கொணர்ந்தே
கனவினை விதைக்கும் கனிவிதை யாமே. ... 1

எழுத்தே தனித்தோ எழுத்துடன் சேர்ந்தோ
அக்ஷரம் என்று வடசொல் குறிக்கும்
ஸிலபிள் என்று ஆங்கிலம் குறிக்கும்
அசையென் பதாகத் தமிழ்மொழி குறிக்கும்;
செய்யுளின் அடிப்படை உறுப்பென் றாகி
குறில்நெடில் ஒற்று வகைகளில் இசையுமே. ... 2

எழுத்தென் பதுவே உருவிலோ ஒலியிலோ
மோனை எதுகை முரணெனும் வகைகளில்
தொடையெனும் உறுப்பினில் தொடுக்க உதவுமே. ... 3

இன்னும் எழுத்தெனும் மன்னிய யுறுப்பு
இயைபெனும் உறுப்பில் ஒலியில் ஒன்றியும்
வண்ணம் என்பதில் தாளம் கூட்டியும்
இழைபில் தேர்ந்த சொற்களின் நடையிலும்
அடிப்படை உறுப்பென் றசைந்து வருமே. ... 4

3.23. எழுத்தியல் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

*****

Thursday, September 8, 2016

3.16. குற்றியலுகரம்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.16. குற்றியலுகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தன்னியல் பாகிய ஒருமாத் திரையில்
குறைந்தே மாத்திரை அரையாய்க் குறுகி
ஒலித்திடும் உகரம் குற்றிய லுகரமே. ... 1

குசுடு துபுறு எனவரும் உகரம்
வல்லின மெய்யுடன் சேரும் போது
வல்லின உயிமெய்க் குற்றுக ரமெனத்
தனிக்குறில் அல்லா மற்றைச் சொற்களில்
வந்திடும் போது குற்றிய லுகரமாய்க்
குன்றி அரைமாத் திரையில் ஒலிக்குமே. ... 2

வல்லின உயிர்மெய் உகரம் ஆறினில் 
குற்றிய லுகரம் குன்றி வருமே
மெல்லின இடையின உயிர்மெய் ஆறினில்
உகரம் குன்றி ஒலிப்பது இலையே. ... 3

தும்பு என்பது குற்றிய லுகரம்
தும்மு என்பது முற்றிய லுகரம்
நஞ்சு என்பது குற்றிய லுகரம்
நஞ்ஞு என்பது முற்றிய லுகரம்
உண்டு என்பது குற்றிய லுகரம்
உண்ணு என்பது முற்றிய லுகரம்
குடகு என்பது குற்றிய லுகரம்
குடவு என்பது முற்றிய லுகரமே. ... 4

கு=பூமி சு=சுகம் து=புசி என்று
கு-சு-து என்னும்-ஓர் எழுத்துச் சொற்கள்
தனிக்குறி லாகத் தனதுமாத் திரையில்
குறையா தொலிக்கக் குற்றிய லுகரம்
ஆகா தெனவே முற்றிய லுகரமாம். ... 5

தனக்கு முன்னால் வரும்-அயல் எழுத்தின்
வகையைப் பொறுத்து வரும்குற் றுகரம்
வகைகளில் ஆறு தொடர்களில் அமையுமே.
ஈற்றுறும் உகரம் ஈற்றயல் எழுத்தின்
தோற்றம் ஓட்டிய தொடரில் அமையுமே. ... 6

வன்றொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

வல்லின மெய்யை ஈற்றயல் கொண்டவை
வன்றொடர்க் குற்றிய லுகர மாமே.
’சுக்கு மச்சு பட்டு 
பத்து உப்பு உற்று’
’சாக்கு நீச்சு பாட்டு 
கூத்து காப்பு உற்று’
என்பன வன்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 7

மென்றொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

மெல்லின மெய்யை ஈற்றயல் கொண்டவை
மென்றொடர்க் குற்றிய லுகர மாமே.
’சங்கு பஞ்சு வண்டு 
பந்து தும்பு நின்று’
’பாங்கு காஞ்சு வாண்டு 
சாந்து பாம்பு சான்று’
என்பன மென்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 8

இடைத்தொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

இடையின மெய்யை ஈற்றயல் கொண்டவை
இடைத்தொடர்க் குற்றிய லுகர மாமே.
’தேய்கு ஆர்கு அல்கு 
--வ்கு மாழ்கு தெள்கு’ ... ... ... [--வ்+கு சொல்லில்லை]
’வெய்து --ர்து --ல்து 
--வ்து போழ்து --ள்து’
’தோய்பு மார்பு சால்பு 
--வ்பு வாழ்பு வள்பு’
என்பன இடைத்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 9

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இடைத்தொடர் வகையில் சு-டு-று உகரம்
இடையின மெய்யை ஈற்றயல் தாங்கி
அமையும் சொற்கள் இலையெனக் காண்க. ... 10

கு-து-பு என்னும் குற்றிய லுகரமும்
இடையின மெய்கள் அனைத்தையும் ஈற்றயல்
கொள்வ தில்லை என்றும் காண்க. ... 11

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

உயிர்மெய் யெழுத்தை ஈற்றயல் கொண்டவை
உயிர்த்தொடர்க் குற்றிய லுகர மாமே.
உயிர்மெய் யெழுத்தில் மெய்யின் பின்னே
உயிரெழுத் தாகச் சேர்ந்து வருவதால்
உயிர்த்தொடர்க் குற்றிய லுகரப் பெயராம்.
’படகு நகாசு அகடு 
தகாது அளபு கதறு’
என்பன உயிர்த்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 12

நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

தனிநெடி லெழுத்தை ஈற்றயல் கொண்டவை
நெடிற்றொடர்க் குற்றிய லுகர மாமே.
’பாகு காசு நாடு 
காது பாபு ஆறு’
என்பன நெடிற்றொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 13

நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் என்பது
தனிநெடில் பின்வரும் ஈரெழுத் துச்சொல்.
’தகாது ஆகாது’ போன்ற சொற்களில்
இரண்டை விஞ்சிய எழுத்துகள் வரவே
உகரம் ஈற்றயல் நெடில்நின் றாலும்
குற்றிய லுகரம் உயிர்த்தொட ராமே. ... 14

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஆய்த எழுத்தை ஈற்றயல் கொண்டவை
ஆய்தத் தொடர்க்குற் றியலுகர மாமே.
’எஃகு கஃசு அஃது சுஃறு’
என்பன ஆய்தத் தொடர்க்குற் றியலுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 15

குற்றியலுகரச் செயல்பாடு
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

குற்றிய லுகரம் செயல்படும் விதத்தைப்
பற்றியோர் மொழியியல் கருத்துண் டாமே
வல்லின மெய்கள் இறுதியில் வந்தால்
சொல்வது எளிதாய் அமைவ தில்லை
காட் அஃத் பஞ்ச் மார்ப்
போன்ற சொற்களை ஒலித்தல் எளிதா? ... 16

எனவே

காடு அஃது பஞ்சு மார்பு
என்று அந்த வல்லின மெய்மேல்
உகரம் ஏறி ஒலித்தல் எளிதாய்
உகரம் தானும் இசையில் நலிந்து
குற்றிய லுகரம் ஆகி விடுமே. ... 17

ஆங்கிலச் சொற்கள் நம் வழக்கில்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

ஆங்கிலம் பயிலும் இன்றைய தமிழில்
ஓங்குதல் காணீர் குற்றிய லுகரமே!
சாக் பாஸ் போட் 
ஷாப் டேப் பார்
என்று பேச்சில் பரந்த ஆங்கிலம்
நன்கு குற்றிய லுகரம் சேர்ந்தே
சாக்கு பாசு போட்டு 
ஶாப்பு டேப்பு பாரு
என்றுநம் பேச்சினில் ஒலித்திடும் அன்றோ? ... 18

[chalk pass boat shop tape bar]

3.17. குற்றியலிகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நிலைமொழி ஈற்றில் குற்றுகரம் நிற்க
வருமொழி முதலில் யகரம் வந்தால்
உகரம் இகர மாகத் திரிந்தே
அரைமாத் திரையாய்க் குறைந்தே ஒலித்துக் 
குற்றிய லிகரம் ஆகி விடுமே. ... 1

குற்றிய லிகரம் இருவகைப் படுமே:
நிலைமொழி வருமொழிப் புணர்ச்சியில் வருவது
புணர்மொழிக் குற்றிய லிகரம் ஆமே.
தனியொரு சொல்லில் குறையும் இகரம்
தனிமொழிக் குற்றிய லிகர மாமே. ... 2

நாடு + யாது = நாடியாது என்றும்
வரகு + யாது = வரகியாது என்றும்
கொக்கு + யாது = கொக்கியாது என்றும்
கண்டேன் + யான் = கண்டேனியான் என்றும்
வருவது புணர்மொழிக் குற்றிய லிகரமே. ... 3

மியாவெனும் முன்னிலை அசைச்சொல் உண்டு
மியாவெனும் சொல்வரும் மி-எனும் இகரம்
அதன்பின் யகரம் வருவதால் குன்றி
தனிமொழிக் குற்றிய லிகரம் ஆமே. ... 4

கேள் + மியா = கேண்மியா என்பதும்
செல் + மியா = சென்மியா என்பதும்
தனிமொழிக் குற்றிய லிகரச் சான்றே. ... 5

*****

Saturday, September 3, 2016

3.15. முற்றிய லுகரம்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.15. முற்றிய லுகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

உகர எழுத்துக் கொருமாத் திரையாம்
உகரம் சொல்லின் இறுதியில் உற்றால்
மாத்திரை குறையா தொலிக்கும் உகரம்
முற்றிய லுகரம் எனும்பெயர் பெறுமே
முற்றாய் ஒலிப்பதால் முற்றிய லுகரமே. ... 1

மாத்திரை குறைந்தே ஒலிக்கும் உகரம்
குற்றிய லுகரம் எனும்பெயர் பெறுமே.
வதுவெனும் சொல்லில் முற்றிய லுகரமாம்
வயது எனவரின் குற்றிய லுகரமாம்
குற்றி ஒலிப்பதால் குற்றிய லுகரமே. ... 2

ஓரெழுத்தில்
உவெனும் தனித்த உயிரெழுத் துடனே
உகர உயிர்மெய் எழுத்துக ளாய்வரும்
உயிர்மெய் குசுடுதுபுறு வல்லின உகரமும்
உயிர்மெய் ஙுஞுணுநுமுனு மெல்லின உகரமும்
உயிர்மெய் யுருலுவுழுளு மெல்லின உகரமும்
தனித்து வந்தால் முற்றிய லுகரமே. ... 3

ஈரெழுத்தில்
தனிக்குறில் அடுத்தோர் உகரம் வந்தால்
தனதுமாத் திரையில் குறைவ தில்லை
குசுடுதுபுறு ணுமுனு யுருலுவுழுளு உகரம்
தனிக்குறில் அடுத்தால் முற்றிய லுகரமே
ஙுஞுநு சொற்கள் இறுதியில் வாரா. ... 4

நகு-பசு தடு-எது விபு-உறு சொற்கள்
அணு-சமு மனு-போல் முடியும் சொற்கள்
மயு-ஒரு வலு-கவு வழு-பளு சொற்கள்
இறுதியில் வருவது முற்றிய லுகரமே. ... 5

தனிநெடில் பின்வரும் உகரம் தனது
மாத்திரை குறைந்தோ நிறைந்தோ ஒலிப்பது
சொல்லைப் பொறுத்தே அமைவது அறிக
சாது எனும்சொல் முற்றிய லுகரம்
மாது என்பதோ குற்றிய லுகரம்
கேது என்பது முற்றிய லுகரம்
கோது என்பதோ குற்றிய லுகரம். ... 6

இத்தகு சொல்லுடன் இரண்டாம் வேற்றுமை
உருபைச் சேர்த்தால் வகையை அறியலாம்.
சாது என்பது சாதுவை என்றும்
மாது என்பது மாதை என்றும்
வருகிற புணர்ச்சியால் வகையை அறிக. ... 7

மூன்றோ மேலோ எழுத்துகள்
மூன்றோ மேலோ எழுத்துகள் அமைந்தே
மெல்லின இடையின மெய்தொடர் உகரம்
முற்றிய லுகரமாய் முழுதும் ஒலிக்குமே. ... 8

திங்ஙு நஞ்ஞு மண்ணு, தும்மு
மன்னு ஓய்வு கல்லு சவ்வு
நிகழ்வு பள்ளு என்பன சான்றே. ... 9

மூன்றோ மேலோ எழுத்துறும் சொல்லில்
சொல்லிறும் உகரம் வல்லின மாயின்
குற்றிய லுகரம் என்றே குறையும்
சொல்லிறும் உகரம் வகையில் இடையினம்
மெல்லினம் ஆயின் முற்றிய லுகரமே. ... 10

முனகு வயசு சுவடு மனது
இரிபு பயறு குற்றிய லுகரமே
கரேணு உருமு திலதேனு உகரமும்
சரயு மெய்யுரு மிகவலு கதவு
மூவேழு சரளு இடையின உகரமும்
எல்லாம் முற்றிய லுகர மாமே. ... 1

சொல்லில் எத்தனை எழுத்துகள் ஆயினும்
சொல்லிறும் உகரம் குற்றிய லுகரம்
அல்லது முற்றிய லுகரம் ஆமே. ... 12

*****