Sunday, January 15, 2017

8.02. தொடை வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.02. தொடை வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செய்யுளின் ஓசையும் இனிமையும் அமைவது
செய்யுளின் சீர்தளை நிரல்கள் பொறுத்தெனில்
சீர்களின் ஓசையைச் செய்வது தொடைகளே. ... 1

தொடைகள் எட்டு வகைகளில் வருவன:
மோனை எதுகை முரண்-இயைபு அளபெடை
ஆன-யிவ் வைந்துடன் அந்தாதி இரட்டைச்
செந்தொடை யென்றே மேலும் மூன்றே. ... 2

மோனை எதுகை முரண்தொடை அளபெடை
நான்கும் அடிகளின் முதற்சீ ருடனும்
இயைபெனும் தொடையே இறுதிச்சீ ருடனும்
தொடர்பு கொண்டு தொடுத்து வருவன. ... 3

மோனைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியின் முதற்சீர் முதலெழுத் துடனே
அடியின் பிறசீர் முதலெழுத் தொன்றியும்
பிறவடி முதற்சீர் முதலெழுத் தொன்றியும்
உறவுடன் வருவது மோனை யாகுமே. ... 4

சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)

பழகப் பழகப் பாலும் புளிக்கும்
என்னும் அடியில் சீர்களில் மோனையும்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
என்னும் குறளில் அடிமோ னையுடன்
சீர்களில் மோனையும் காணுதல் எளிதே. ... 5

எதுகைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியின் முதலெழுத் தளவொத் திருக்க
அடியின் முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியின் பிறசீர் இரண்டாம் எழுத்தும்
பிறவடி முதற்சீர் இரண்டாம் எழுத்தும்
உறவுடன் வருவது எதுகை யாகுமே. ... 6

சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)

காலையும் மாலையும் ஆலையில் வேலை
என்னும் அடியில் சீரெது கையும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று
என்னும் குறளில் அடியெது கையுடன்
சீர்களில் எதுகையும் காண்பது எளிதே. ... 7

முரண் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியின் முதற்சீர் சொல்லோ பொருளொ
அடியின் பிறசீர் களிலோ அன்றி
பிறவடி களில்வரும் முதற்சீ ருடனோ
முரண்படத் தொடுத்து நயம்பெற அமைவது
முரணெனும் தொடைவகை யெனப்பெயர் பெறுமே. ... 8

சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)

அல்லும் பகலும் சொல்லி மாளாது
என்னும் அடியில் முதலிரு சீர்களில்
பொருள்முரண் காண்க
வெள்ளாடு மேய்ந்த பசுந்தழை எனும்தொடரில்
நிறத்தில் தழையே பசுமை ஆயினும்
நிறத்தில் வெள்ளாடு கருமையென் றாதலால்
பொருள்முர ணின்றிச் சொல்முர ணாகுமே. ... 9

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
என்னும் குறளில் அடிமுரண் பொருளிலும்
அடியெது கையும் சீர்மோ னையும்காணீர். ... 10

அளபெடைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிகளில் முதற்சீர் அளபெடுத் தமைந்து
அளபெடை யெழுத்தின் மாத்திரை நீள்வது
அளபெடைத் தொடையெனும் வகையினில் அமையுமே. ... 11

சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
என்னும் குறளடி முதற்சீர் களிலே
அளபெடைத் தொடைவரக் காண்பது எளிதே. ... 12

அந்தாதித் தொடை
(இணைக்குறள் ஆசிரியப்பா)

அடியொன்றின் அந்தமென முடிகின்ற எழுத்தோ
எழுத்தை உள்ளிட்ட அசையோ
அசையை உள்ளிட்ட சீரொன்றோ
அடுத்த அடியில் முதற்சீரில் முளைத்துத்
தொடர்ந்து வருவ(து) அந்தாதித் தொடையே. ... 13

அந்தமே ஆதியென வந்திடும் போது
எழுத்தசைச் சீருடன்
அடியே முழுவதும் திரும்புதல் உண்டு
அடியந் தாதி என்னும் பெயரிலே. ... 14

சான்று (இளம்பூரணார் தொல்காப்பிய உரையில் தருவது)
(நேரிசை ஆசிரியப்பா)

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலிரு அடிகளில் அசையைந் தாதி
இரண்டும் மூன்றும் சீரந் தாதி
மூன்றும் நான்கும் சீரந் தாதி
நான்கும் ஐந்தும் அடியந் தாதி
ஐந்தும் ஆறும் சீரந் தாதி
ஆறும் ஏழும் எழுத்தந் தாதி
ஏழும் எட்டும் எழுத்தந் தாதி
எட்டும் முதலும் சீரந் தாதியே. ... 15

இரட்டைத் தொடை
(இணைக்குறள் ஆசிரியப்பா)

’வந்த மொழியே வருவ திரட்டை’ ... (யா.கா.)
அடியில் முதல்வரும் சொல்லே
மற்றச் சீர்களில் திரும்ப வருவது
இரட்டைத் தொடையென் றழைக்கப் படுமே. ... 16

சான்று
பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
--புறநானூறு 247

செந்தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மோனை எதுகை இயைபு முரணுடன்
ஏனை அளபெடை அந்தாதி இரட்டைத்
தொடைகள் எதுவுமே அமைந்து வராது
சொற்களின் இயல்பில் அழுகுற அமைவது
செந்தொடை என்னும் பெயரில் வழங்குமே. ... 17

சான்று
(நேரிசை ஆசிரியப்பா)
பூத்த வேங்கை வியன்சினை ஏறி,
மயிலினம் அகவும் நாடன்
நன்னுதல் கொடிச்சி மனத்தகத் தோனே
--யா.கா.மேற்கோள்

*****

No comments:

Post a Comment