11.12 செப்பலோசை வெண்பா முயற்சி (வெண்பா) (இன்னிசை வெண்பா) ஒருபொருள் பற்றியே மூவகை ஓசை உருவினில் ஈரடி மூவடி நாலடி வெண்பா முயல்வினில் வெவ்வே றொலிகாண எண்ண வெழுந்தன வே. (ஒருவிகற்பக் குறள் வெண்பா) (ஏந்திசைச் செப்பல்) பாழடைந்த கேணியொன்றைப் பற்றியழும் பேய்-ஓலம் காழிருந்தால் அவ்வழி-வை கால். (தூங்கிசைச் செப்பல்) அழிந்த கிணற்றில் அரற்றும் ஒருபேய் வழியது செல்மனம் வம்பு. (ஒழுகிசைச் செப்பல்) அழிந்த கிணற்றில் அரற்றியழும் ஓர்பேய் வழியது போனாலோ வம்பு. (ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா) (ஏந்திசைச் செப்பல்) மல்லிகைப்பூ முல்லைப்பூ வாசனையாய்ப் பூத்திருக்க மெல்லியதோர் காற்றலைக்கும் மெல்லிடையாள் மேலாடை சொல்லினிலே பூத்தாளே தொட்டு. (தூங்கிசைச் செப்பல்) மல்லிகை முல்லை மலரும் மணத்துடன் மெல்லிய காற்றலை மெல்லிடை மேலுடை சொல்லில் மலர்ந்தனள் தொட்டு. (ஒழுகிசைச் செப்பல்) மல்லிகை முல்லை மலர்களெலாம் வாசனையாய் மெல்லியதோர் காற்றலை மெல்லிடையாள் மேலாடை சொல்லில் மலர்ந்தாளே தொட்டு. (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா) (ஏந்திசைச் செப்பல்) தத்திவரும் ஆழியலை மத்தளத்தின் ஓசையொடு எத்திவிடும் பாப்பாவின் சென்னியெலாம் மண்துகளாய் கத்தியுரை யாடுமப்பா காதினிலே கைபேசி அத்தையுடன் அம்மாவின் பேச்சு. (தூங்கிசைச் செப்பல்) தத்தும் கடலலை மத்தள ஓசையில் எத்தும் குழந்தை தலையெலாம் மண்துகள் கத்தும் தகப்பனின் கைபே சியில்செவி அத்தையும் அன்னையும் பேச்சு. (ஒழுகிசைச் செப்பல்) தத்திவரும் ஆழியலை மத்தள ஓசையில் எத்தும் குழந்தையின் சென்னியெலாம் மண்துகள் கத்தும் தகப்பனின் காதினில் கைபேசி அத்தையுடன் அன்னையின் பேச்சு. 11.13 செப்பலோசை வெண்பாப் பயிற்சி (வெண்பா) நினைவிற் கொள்ள: (இன்னிசை வெண்பா) ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை இவ்விரண்டும் சேர்ந்து ஒழுகிசைச் செப்பலாய்ச் செவ்விதின் யாப்பில் எழும். பயிற்சி 1. மூவகைச் செப்பலோசைக் குறட்பா நிரலமைத்தல் (பஃறொடை வெண்பா) மூவகைச் செப்பல் ஒலியின் குறட்பாக்கள் மூன்று கலைந்துள சொற்களில் கீழுள ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை தேர்ந்தின் நிரல்களில் மூன்று குறட்பாவும் ஓர்ந்து அமைத்தே எழுது. உள்ளத்தால் உள்ளலும் காணாதாற் பெருமை கள்ளத்தால் காட்டுவான் பிறன்பொருளைக் தான்காணான் விடும். கள்வேம் தீதே மறைமொழி நிலத்து வாறு. எனல். தான்கண்ட நிறைமொழி காட்டி மாந்தர் காணாதான் கண்டானாம் பயிற்சி 2. மூவகைச் செப்பலோசைக் குறட்பா எழுதுதல் (இன்னிசை வெண்பா) ஏந்திசை தூங்கிசைச் செப்பல் ஒழுகிசை தேர்ந்திந் நிரல்வர மூன்றுகுறள் வெண்பாக்கள் ஓர்ந்தே புனைக ஒருபொருள் பற்றியோ ஆர்ந்த பலபொருளி லோ. ***** 11.14 எதுகையால் வரும் வெண்பா விகற்பம் (வெண்பா) (பலவிகற்ப இன்னிசை வெண்பா) வெண்பா வகையை அடியெது கைவரும் எண்ணுடன் சேர்த்துக் குறித்தல் வழக்கம் ஒருவிகற்ப இன்னிசை வெண்பா புனைந்தால் வருமே அடியெதுகை ஒன்று. (பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா) ஒருவிகற்ப மற்றும் இருவிகற்ப ஏனைப் பலவிகற்ப வெண்பாக்கள் சான்று முறையே வரும்பாக்கள் கீழுள் ளவை. (ஒருவிகற்பக் குறள் வெண்பா) அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. --திருக்குறள் 001:01 (இருவிகற்பக் குறள் வெண்பா) அமிழ்தினு மாற்ற வினிதே தம்மக்கள் சிறுகை யளாவிய கூழ். --திருக்குறள் 007:04 (ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா) வான்முறை யான்வந்த நான்மறை யாளரை மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல் நூன்முறை யாளர் துணிவு. --பெருவாயின் முள்ளியனார், ஆசாரக் கோவை, 061 (பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா) தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும் முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்யாக்கால் எப்பாலும் ஆகா கெடும். --பெருவாயின் முள்ளியனார், ஆசாரக் கோவை, 003 (ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா) நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. --ஔவையார், மூதுரை 012 (இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா) ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -- ஏற்றம் உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. ---ஔவையார், நல்வழி 012 (பலவிகற்பப் பஃறொடை வெண்பா) முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார் துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக் கானந் தமியர் இயங்கார் துளியஃகி நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே தொல்வரவின் தீர்ந்த தொழில். --பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 056 *****
கவிதையில் யாப்பு
அடிப்படை யாப்பிலக்கணம் பயில்வது இதைவிட எளிதாமோ?
Wednesday, May 24, 2017
11.12 செப்பலோசை வெண்பா முயற்சி
11.08 வெண்பாவின் தளை
11.08 வெண்பாவின் தளை (வெண்பா) (பலவிகற்ப இன்னிசை வெண்பா) வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம் வெண்டளையால் தானே வருவது செப்பலோசை மாமுன் நிரையும் விளம்காய்முன் நேர்வர வாகுமே வெண்டளை காண். ... 1 (இருவிகற்பக் குறள்வெண்பா) வெண்டளையில் வெண்சீர் இயற்சீர் எனவே இரண்டு வகைகள் உள. ... 2 (பலவிகற்பச் சிந்தியல் வெண்பா) இயற்சீரின் வெண்டளையில் மாமுன் நிரையும் விளம்முன்னே நேருமென மாறியே வந்திடும் வெண்பா இயற்சீர் என. ... 3 (ஒருவிகற்பக் குறள் வெண்பா) வெண்சீரின் வெண்டளையில் காய்முன்னே நேர்வரும் வெண்பாவின் காய்ச்சீர் என. ... 4 ***** 11.09 வெண்பாவின் அடி (வெண்பா) (பலவிகற்பப் பஃறொடை வெண்பா) வெண்சீர் இயற்சீர் இயன்றிடும் வெண்பாவில் நாற்சீர் பயிலும் அளவடி மட்டுமே ஈற்றடி முச்சீரில் சிந்தடியாய் நின்றிட ஈற்றுச்சீர் நாள்,மலர் காசு பிறப்பென மேற்சொன்ன நால்வகை யில். ... 1 (பலவிகற்ப இன்னிசை வெண்பா) கீழெல்லை யாக இரண்டடி வந்துநிற்க மேலெல்லை வெண்பா வகைபொறுத்து மாறும் குறட்பா இரண்டடி மேலெல்லை கீழெல்லை சிந்தியல் எல்லைகள் மூன்று. ... 2 அளவியல் எல்லைகள் ஆவது நான்கடி பஃறொடை ஐந்தும் பனிரெண்டும் எல்லை கலிவெண்பா பத்துடன் மூன்றடிக் கீழெல்லை மேலெல்லை யேது மிலை. ... 3 (பலவிகற்பப் பஃறொடை வெண்பா) மூச்சீரே வந்திடும் வெண்பாவின் ஈற்றடிக்கு முக்கா லடியென்றும் ஓர்பெயர் சொல்லுவர் ஓரடி முக்கால் குறள்வெண்பா எல்லையாம் ஈரடி முக்காலே சிந்தியல் எல்லையாம் மூவடி முக்கால் அளவியல் எல்லையாம் பன்னிரண்டு முக்காலாம் பஃறொடை எல்லை பதிமூன்று முக்கால் கலிவெண்பாக் கீழெல்லை மேலெல்லை யேது மிலை. ... 4 (பலவிகற்ப இன்னிசை வெண்பா) வெண்பா எனும்பேரே நாலடி யாகவரும் வெண்பாவைச் சுட்டுவ தாய்-இவ் வகையில் முதல்மூன் றடிகள் அளவடி யாய்வரும் ஈற்றடி சிந்தடி யாம். ... 5 ***** 11.10 செப்பலோசை என்பது (வெண்பா) செப்புதல் என்றால் விடையெனக் கூறல் மறைவின்றித் தானே இயல்பாய் மொழிதல் மறைத்தொன்றைக் கூறாது செப்பியே கூறுதல் என்றுநச்சி னார்க்கினியர் நூல். இசைகுறித்து வாராமல் செப்புத லாகிய வாக்கியம் போன்றதாம் ஓசை எனவே இளம்பூ ரணர்-உரைக் கூற்று. அகவலும் செப்பலும் (வெண்பா) காரிகை சொல்லும் அகவலும் செப்பலும் சீரினில் இங்ஙனம் வேறு படுவதாம் சீர்சால் அகவலெனக் காரிகைச் சொல்லாம் இருவகை என்னும் இயற்சீர் விளம்-மா வரும்சீர் நிலைச்சீர் இனத்தினில் ஒன்ற நிறையும் அகவல் ஒலி. திண்பா மலிசெப்பல் ஓசையெனும் காரிகை திண்மை செறியும் ஒலியென் றியற்சீரின் மாவிளம் என்றவை மாறி வருவதும் காய்முன்நேர் என்று கதித்து வருவதும் ஆய்ந்தால் விளங்குவ தாம். வெள்ளைப்பா என்பதும் வெண்பாவின் பேராக வெள்ளோசை என்றுமே வெண்பாவின் ஓசையாய்ச் செப்பலுக் கின்னொரு பேரென் றறிக; தளைகளே ஓசையின் மூலம் எனவெண் டளைவரச் செப்பல் எழும். அகவல், செப்பலொலி வேறுபடும் சான்றுகள் (வெண்பா) நேரொன்றும் ஆசிரி யத்தளை ஓசையாம் நேரிசை ஆசிரி யப்பா ஒலிநயம் கீழ்வரும் பாடலி லே. (ஆசிரியப்பா) கண்ணன் என்னும் மன்னன் பேரை எண்ணும் உள்ளத் தின்பம் பண்ணில் ஏற்றிப் பாடும் உள்ளே. (வெண்பா) வெண்சீரின் வெண்டளை மட்டும் ஒலித்திடும் வெண்பாவில் ஆள்கின்ற செப்பல் ஒலிநயம் கீழ்வரும் பாடலி லே. கண்ணனெனும் மன்னவனின் கன்னலன்ன பேரொன்றே எண்ணமுறும் உள்ளத்தில் இன்பங்கள் சூழ்ந்துகொளும் பண்ணுறவே துள்ளிவிழும் பாட்டு. நிரையொன்றும் ஆசிரி யத்தளை ஓசையாம் நேரிசை ஆசிரி யப்பா ஒலிநயம் கீழ்வரும் பாடலி லே. (ஆசிரியப்பா) மலைவிழும் அருவியில் வழிந்துறும் வளமென அலைவிழும் கடற்கரை அமிழ்கழல் கலைவிழும் சிலையவள் கருவிழி அலைவதே. (வெண்பா) இயற்சீரின் வெண்டளை மட்டும் ஒலித்திடும் வெண்பாவில் ஆள்கின்ற செப்பல் ஒலிநயம் கீழ்வரும் பாடலி லே. மலைவீழ் அருவி வழியும் வளமாய் அலைவீழ் கரையில் அமிழும் கழலாய் கலைவீழ் சிலையாள் விழி. ***** 11.11 செப்பலோசையின் வகைகள் (வெண்பா) (பஃறொடை வெண்பா) மூன்று வகையெழும் செப்பலெனும் ஓசையாம் ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை ஏந்திசை வெண்பா வுரிச்சீரால் மட்டுமே தூங்கல் இயற்சீரால் மட்டும் ஒழுகிசையில் இவ்விரு சீர்கள் கலந்து. (இன்னிசை வெண்பா) ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை இவ்விரண்டும் சேர்ந்தே ஒழுகிசைச் செப்பலாய்ச் செவ்விதின் யாப்பில் எழும். (பஃறொடை வெண்பா) நால்வகைக் காய்ச்சீர்கள் வெண்பா வுரிச்சீராம் நால்வகை மாவிளச்சீர் ஆகும் இயற்சீராம் காய்முன்னே நேர்வர வெண்சீரின் வெண்டளை மாமுன் நிரையும் விளமுன்னே நேருமென மாறி வருதல் இயற்சீரின் வெண்டளை இவ்வா(று) இருதளை எண்சீர் இயன்றுவரும் செவ்வையே வெண்பா அமைப்பு. மூவசையா லாகிவந்து நீரலையா யேந்திவந்து நாவசைய ஓசையெழும் ஏந்திசையின் செப்பலாக தூங்கிசைச் செப்பல் இயற்சீர் வரவரும் தூங்கி வருவது தொங்கி வருதல் இருவகை வெண்டளையும் யாப்பில் கலத்தல் இருவகை ஓசை ஒழுக்கு. ஏந்திசைச் செப்பல் சான்றுகள் (குறள் வெண்பா) யாதானு நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. --திருக்குறள் 040:07 தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் காசு (சிந்தியல் வெண்பா) விண்ணோரும் மண்ணோரும் வேண்டுமருள் ஈசனவன் கண்மூன்று கொண்டவனாம் காப்பவனாம் நானிலத்தை எண்ணவரும் ஈசனருள் இன்று. தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் காசு (அளவியல் வெண்பா) ஏரானைக் காவிலுறை யென்னானைக் கன்றளித்த போரானைக் கன்றுதனைப் போற்றினால் - வாராத புத்திவரும் பத்திவரும் புத்திரவுற் பத்திவரும் சத்திவருஞ் சித்திவருந் தான். --தனிப்பாடற்றிரட்டு, பகுதி 1 காப்பு வெண்பா தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளம் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் நாள் மேல்வந்த வெண்பாக் குறிப்பு (இன்னிசை வெண்பா) ஒருசீர் தவிர பிறசீர் களிலே வருவது மூவசைக் காய்ச்சீர்கள் ஏந்திசை போற்றினால் என்பதைப் போற்றிடவே என்றுநாம் மாற்ற இதுவுமே காய். (பஃறொடை வெண்பா) காலையிளம் சூரியனின் கற்றையொளி கண்ணிறையும் சோலையெலாம் பொன்னிறமாய்த் தோன்றியொளிர் காட்சியினில் புள்ளினத்தின் பண்ணலைகள் போகவரும் காற்றினிலே அள்ளிவரும் தென்றலிலே ஆர்ந்துவரும் வாசனைகள் தெள்ளியநீ ரோடையிலே சிற்றலையாய் நீரோட்டம் உள்ளமெலாம் பொங்கியெழும் ஊற்று. கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் காசு தூங்கிசைச் செப்பல் சான்றுகள் (குறள் வெண்பா) கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. --திருக்குறள் 040:01 தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா புளிமா நாள் பாலொடு தேன்கலந் தற்றே மணிமொழி வாலெயி றூறிய நீர். --திருக்குறள் 113:01 கூவிளம் கூவிளம் தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் நாள் (சிந்தியல் வெண்பா) இருவிழி காண இறங்கும் உருவாய் இருசெவி கேட்க இறங்கும் ஒலியாய் ஒருமனம் ஆழங் கொளும். கருவிளம் தேமா புளிமா புளிமா கருவிளம் தேமா புளிமா புளிமா கருவிளம் தேமா மலர் (அளவியல் வெண்பா) இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை. --நாலடியார், 65 புளிமா புளிமா புளிமா கருவிளம் தேமா புளிமா கருவிளம் தேமா புளிமா புளிமா கருவிளம் தேமா புளிமா புளிமா மலர் (பஃறொடை வெண்பா) கதிரினைக் காணார் நிலவினைக் காணார் சதியும் பதியும் தனியாய்ப் பயணம் விடியும் பொழுதில் விளையும் அலுவல் முடியும் பொழுதினில் முற்றிருள் சூழும் கடிநகர் வாழ்வின் கயம். கருவிளம் தேமா கருவிளம் தேமா புளிமா புளிமா புளிமா புளிமா புளிமா புளிமா புளிமா புளிமா புளிமா கருவிளம் கூவிளம் தேமா கருவிளம் தேமா மலர் ஒழுகிசைச் செப்பல் சான்றுகள் குறள் வெண்பா தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு. --திருக்குறள் 040:06 கூவிளம் தேமா புளிமாங்காய் புளிமா கருவிளம் தேமா பிறப்பு (சிந்தியல் வெண்பா) பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத் - தேடியே கூடி வணங்குமுல கு. --கி.வா.ஜ., ’கவி பாடலாம்’ பக்.90 தேமா புளிமா புளிமா கருவிளங்காய் தேமா கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளம் தேமா கருவிளங்காய் நாள். (அளவியல் வெண்பா) [அலகிட்டு ஓசை அறிக] ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. --ஔவையார், நல்வழி 12 (பஃறொடை வெண்பா) [அலகிட்டு ஓசை அறிக] முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார் துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக் கானந் தமியர் இயங்கார் துளியஃகி நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே தொல்வரவின் தீர்ந்த தொழில். ---பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 56 *****
11.05 நாள் மலர் காசு பிறப்பு சான்று
11.05 நாள் மலர் காசு பிறப்பு சான்றுச் சொற்கள் (வெண்பா) (குறள் வெண்பா) கீழ்வரும் சொற்சான்று நோக்கத் தெரியுமே நாள்மலர் காசு பிறப்பு. ... 1 க-கல்-கா-கால் சொற்களில் நேர்தனி வந்திட நாளெனும் வாய்பாடா கும். ... 2 (சிந்தியல் வெண்பா) கட-கடல் மற்றும் கடா-கடாம் சொற்கள் நிரைதனி வந்து மலரெனும் வாய்பாடால் ஆவது என்று உணர். ... 3 படுஎனும் சொல்லில் தனிநிரை யாம்மலர் பட்டு எனும்போது குற்றுகரம் சேர்வதால் நேர்பெனும் காசா வது. ... 4 தகாஎனும் சொல்லில் தனிநிரை காண தகாது எனும்சொல்லில் குற்றுகரம் சேர்வதால் ஆகும் நிரைபு பிறப்பு. ... 5 (குறள் வெண்பா) சிறுபான்மை முற்றுகரம் கூட வருவதுண்டு சொல்லு, கதவு என. ... 6 (பஃறொடை வெண்பா) வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய் கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்களாம் கூம்பு-சாய்த்து ஆடு-பாரு தந்து-நில்லு அஞ்சு-நீர்க்கு சொற்களைச் சேர்க்கும் கழித்தல் குறிநீக்க எல்லாமே நேர்பெனும் காசு. ... 7 வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய் கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்கள் முடங்கு குவவு விரைந்து அலங்கு பலவு இரவு உறாது இராது அனைத்தும் நிரைபு பிறப்பு. ... 8 ***** 11.06 நாள் மலர் காசு பிறப்பு திருக்குறள் சான்றுகள் (குறள் வெண்பா) வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய் வள்ளுவரின் சான்று சில. ... 1 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். ... [நாள்] வெண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. ... [மலர்] இருள்சேற் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ... [காசு] அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. ... [பிறப்பு] ***** 11.07 நாள் மலர் காசு பிறப்பு: அனைத்துவகைச் சான்றுகள் (வெண்பா) (சிந்தியல் வெண்பா) வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்ப் பைந்தமிழ்ச் சான்றுகள் பார்க்கும் பொழுது இறுதி இரண்டடிகள் இங்கு. (குறள் வெண்பா) நாள்மலர் காசு பிறப்பு அனைத்து வகைச்சான்றும் கீழே உள. கீழுள்ள சான்றுகள் ஔவையின் பாக்களே வேறி ரண்டு தவிர்த்து. முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக் குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு. [தனிக்குறில்: நேர்: நாள்] ---காளமேகப் புலவர் இஞ்சிக்குடி தாசி கலைச்சியை இகழ்ந்து பாடியது. இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா தவன்வாயிற் சொல். [தனிக்குறிலொற்று: நேர்: நாள்] துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. [தனிநெடில்: நேர்: நாள்] தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். [தனிநெடிலொற்று: நேர்: நாள்] நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. [குறிலிணை: நிரை: மலர்] புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின்மேள் இட்ட கலம். [குறிலிணையொற்று: நிரை: மலர்] கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை. [குறில்நெடில்: நிரை: மலர்] வன்னி கதிரவன் கூடிடி லத்தகை பின்னிவை யாகு மெலாம். [குறில்நெடிலொற்று: நிரை: மலர்] ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு. [தனிக்குறிலொற்று+உகரம்: நேர்பு: காசு -- தனிக்குறில்+உகரம் வரக்கூடாது.] உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. [தனிநெடில்+உகரம்: நேர்பு: காசு] கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு. [தனிநெடிலொற்று+உகரம்: நேர்பு: காசு] கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு. [குறிலிணை+உகரம்: நிரைபு: பிறப்பு] தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றவிடம் எல்லாம் சிறப்பு. [குறிலிணையொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு] உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல் நிரையுள்ளே இன்னா வரைவு. [குறில்நெடில்+உகரம்: நிரைபு: பிறப்பு] ---பழமொழி நானூறு 68 நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து. [குறில்நெடிலொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு] *****
Wednesday, May 3, 2017
11.02 வெண்பாவின் சீர்
11.02 வெண்பாவின் சீர் (வெண்பா) (பலவிகற்பப் பஃறொடை வெண்பா) அகவற்சீர் நால்வகை யாகும் இயற்சீர் தகவுடன் வெண்பா வுரிச்சீர் எனப்படும் காய்ச்சீர்கள் நால்வகையும் காணலாம் வெண்பாவில் நால்வகை ஒன்றில் அசைச்சீராம் ஈற்றடியில் நாள்மலர் காசு பிறப்பு. ... 1 தேமா புளிமா கருவிளம் கூவிளமென் றேமாப் பெயர்-இயற்சீர் ஈரசையாம் நான்குடன் ஈரசை யோடொரு நேரசை சேரும் இருவகைக் காய்ச்சீர்கள் நான்கென்று மொத்தமாய் எண்வகைச் சீர்களும் வந்தமரும் வெண்பாவே ஒண்பாவாய் நிற்கும் ஒளிர்ந்து. ... 2 (ஒருவிகற்பக் குறள்வெண்பா) கனிச்சீர்கள் நான்கையும் காணாவெண் பாவென்(று) அனிச்ச மலராய் அறி. ... 3 (பலவிகற்ப இன்னிசை வெண்பா) காளமே கப்புலவர் பாடியவிப் பாடலில் ஆள்கனிச் சீரோ முதலடிச் சீர்மூன்றில்? தாளம் தவறா? தளைதட்டல் உள்ளதா? வாளைமீன் போலோர் வழுக்கு! ... 4 (இருவிகற்ப நேரிசை வெண்பா) நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த் தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில் பாம்பாகும் வாழைப் பழம். நாத(ர்)முடி என்றால் இடையின வொற்றாம்-இர் யாதொன்றும் கொள்ளா(து) அலகெனவே - நாதமுடி; தாளம் தவறாத் தளைதட்டா வெண்பாவாம் காளமேகர் வெண்பாக் கவி. ... 5 11.03 வெண்பாவில் ’விளாங்காய்ச்சீர்’ (பலவிகற்பப் பஃறொடை வெண்பா) நிரைநடு வாய்வரும் காய்ச்சீர் இரண்டு கருவிளங் கூவிளங் காய்ச்சீர் எனவே நிரையிற் குறிலிணை, ஒற்றுடன் என்றால் நிரைநடு காய்ச்சீர் ஒலிபிற ழாது நிரையிற் குறில்நெடில், ஒற்றுடன் என்றால் நிரைநடு காய்ச்சீர் ஒலிபிறழ் வாமென அன்றுநம் முன்னோர் அறிந்துவெண் பாவினில் நன்றல என்றிவ் வகைப்படும் சீர்கள் பெரிதும் தவிர்த்தே இயற்றினர் வெண்பா அரிதெனக் காண்போம் அவை. ... 1 (பலவிகற்ப இன்னிசை வெண்பா) கீழ்வரும் வெண்பாவில் நாற்சீர் விளாங்காயென் றாழ்ந்துவரும் ஓசையை ஆய்ந்தறி யும்செவியால் மாற்றுவோம் பாவை வகயுளி யாகவோ மாற்றெனச் சீரமைத் தோ. ... 2 ஒருவிகற்பக் குறட்பா (சிர்கள் 1, 3, 5, 6-இல் விளாங்காய்) வேர்ப்பலாவின் தீங்கனி வெட்டியேநாம் தேனுடன் சேர்த்தவாறே உண்பமேயென் றே. ஒருவிகற்பக் குறட்பா (வகையுளி செய்து விளாங்காய்ச்சீர் நீக்கியது) வேர்ப்பலா வின்தீங் கனிவெட்டி யேதேனைச் சேர்த்தவா றேயுண்போம் நாம். ஒருவிகற்பக் குறட்பா (வகையுளி யின்றி விளாங்காய்ச்சீர் நீக்கியது) வேர்ப்பலாத் தீங்கனி வெட்டியே தேன்தடவிச் சேர்த்தபடி உண்போமே நாம். (பலவிகற்பப் பஃறொடை வெண்பா) விளங்காய் நிரைநடுச் சீர்களில் இங்ஙன் குறில்நெடில் ஒற்றுடன் கூடி வருதல் விளாங்காய்ச்சீர் என்பதாம் இந்நாள் வழக்கு விளாங்காய்ச்சீர் வந்தமைய வெண்பா வியற்றல் இலக்கணத் தப்பென வில்லை யெனினும் ஒலிபிறழ் வென்று தவிர்த்தே அவற்றைநாம் தள்ளிவி யற்றல் தகை. ... 3 11.04 வெண்பாவின் ஈற்றுச்சீர் (வெண்பா) அசைச்சீர் வாய்பாடு (பலவிகற்ப இன்னிசை வெண்பா) வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச்சீர் நால்வகையில் பண்பட்டு வந்துநிற்கும் ஓரசையாய் - உண்டாகும் நாள்,மலர் காசு பிறப்பெனும் வாய்பாட்டில் நால்வகையில் நிற்கும் இசைந்து. ... 1 அசைச்சீரின் அசைகள் (பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா) வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய் நேர்,நிரை நேர்பு நிரைபு எனவொன்றில் ஓரசையாய் நிற்கும் உவந்து. ... 2 நாள் மலர் (பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா) வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய் நேர்தனியே வந்திட நாளென் றறிக நிரைதனியே வந்தால் மலர். ... 3 [உதாரணம்: நாள்: கு, தா, கல், சொல்] மலர்: உள, உளம், கலா, கலாம்] காசு பிறப்பு (பலவிகற்ப இன்னிசை வெண்பா) வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய் ஒற்றைக் குறில்தவிர்த்த நேருடன் குற்றுகரம் சேர்வது காசெனும் நேர்பு; நிரையுடன் சேர்ந்தால் பிறப்பாம் நிரைபு. ... 4 தனிக்குறில் ஒற்றுடன், ஒற்றுடன் ஓர்நெடில், அன்றித் தனிநெடில், ஆகிய நேரசை மூன்றுடன் குற்றுகரம் சேர்ந்து வருவது காசெனும் நேர்பா வது. ... 5 [காசு உதாரணம்: கொக்கு, மூப்பு, வீடு] குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ தனியாக, ஒற்றடுத்து வந்திடும் நான்கு நிரையசை யோடொரு குற்றுகரம் சேர்வதால் ஆகும் நிரைபு பிறப்பு. ... 6 [பிறப்பு உதாரணம்: சிறகு, சிறப்பு, வரைவு, இசைந்து] (இருவிகற்பக் குறள் வெண்பா) குற்றுகரம் ஆகும் குசுடு துபுறு உயிர்மெய் எழுத்துகள் காண். ... 7 ஈற்றடியில் வாய்பாட்டுச் சொல் (இருவிகற்பக் குறள் வெண்பா) வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய் வந்திடுமோ வாய்பாட்டுச் சொல்? ... 8 (பலவிகற்பப் பஃறொடை வெண்பா) நாளெனும் சொல்நேர் எனவே வரலாம் மலர்ச்சொல் வரலாம் தனிநிரை யாவதால் காசுச்சொல் ஆகும்நேர் பின்குற் றுகரம் பிறப்புச்சொல் ஆகுநிரை பின்குற் றுகரம் இரண்டும் வருமீற்றுச் சீர். ... 9 (இருவிகற்பக் குறள் வெண்பா) வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய் நாள்,மலர் காசு பிறப்பு. ... 10 (பலவிகற்ப இன்னிசை வெண்பா) வேறெந்தச் சீராக நாள்மலர் கூடாது ஓரசைச்சீர் என்றவை யாவதால் - வேறுவகைப் பாவிலும் வாரா கலிப்பா உறுப்பான அம்போத ரங்கம் தவிர்த்து. ... 11 (பலவிகற்ப இன்னிசை வெண்பா) வேறெந்தச் சீராகக் காசு பிறப்பு வரலாம் எனினும் அதுபோல வந்தாலோ இங்கு முதலடியில் உள்ளது போலவே ஈரசைச் சீர்களாகும் காண். ... 12 (பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா) வேறடியில் காசு பிறப்பு வரலாம் நிரை-நேர் எனப்பிறப்பும் நேர்-நேர் எனக்காசும் ஈரசைச் சீர்களாகும் காண். ... 13 ஈற்றுச் சீர் சான்றுகள் (ஒருவிகற்பக் குறள் வெண்பா) நாள்மலர் காசு பிறப்பென ஈற்றுச்சொல் ஆள்குறட் பாவெழுது வோம். ... 14 மடம்பயிர்ப்பு நாணம் மனவச்சம் இன்றி நடமாடும் பெண்டிரிந் நாள். மங்கை தலையமரும் மல்லிகைப் பூவெனில் மங்கையும் தானே மலர்? படும்பாட்டில் இல்லாள் பதுக்கியே சேர்த்தாள் கடுகுச் சிமிழினுள் காசு! எருமைகள் மேய்த்தாலும் ஈசன்பேர் சொல்லப் பெருமைகள் சேரும் பிறப்பு. *****
Thursday, April 27, 2017
11.00 வெண்பா
11.00 வெண்பா (வெண்பா) (வெறும்பா விரவியது) (இருவிகற்ப நேரிசை வெண்பா) வேறேதும் வண்ணம் விரவாத வெண்மையே மாறாது நிற்பதெனும் மாண்பாகும் - வேறு தளைகளுடன் சீர்கள் தகையாத தூய்மை வளமாகும் வெண்பா வனப்பு. ... 1 (ஒருவிகற்ப நேரிசை வெண்பா) வெண்மையே இன்னோர்பேர் வெள்ளைக்கென் றாவதுபோல் வெண்பாவை வெள்ளைப்பா வென்பரே - ஒண்மைமிகு வெண்பாவை ஒண்பா வெனவும் அழைப்பரே உண்மையாம் அந்த வுயர்வு! ... 2 [ஒண்மை=இயற்கை அழகு, ஒழுங்கு, அறிவு;] (இருவிகற்ப நேரிசை வெண்பா) வெண்பா விலக்கணம் மீறமுடி யாததால் வெண்பாவோர் வன்பா வெனப்படும் - ஒண்ணா விலக்கும் அயற்சீரால் வேற்றளையால் வெண்பா புலவர்கள் அஞ்சும் புலி. ... 3 ஔவை சொன்னது: காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம் பேசுமுலா விற்பெதும் பைப்புலி - ஆசு வலவர்க்கு வண்ணம் புலியாமற் றெல்லாப் புலவர்க்கும் வெண்பா புலி. --தனிப்பாடல் பொருள் உலகில் பிள்ளைக்கவிப் புலவர்க்கு அம்புலிப் பருவம் பாடுவது புலியாம் (அரிய செயல்); சிறப்பாகப் பேசப்படும் உலாப் பாடும் புலவர்க்கு பெதும்பைப் பருவம் பாடுவது புலியாம்; ஆசு கவியோர்க்கு (நினைத்தவுடன் பாடும் கவியோர்க்கு) வண்ணப் பாடல் புலியாம்; மற்றெல்லாப் பாவலர்க்கும் வெண்பா பாடுதல் புலியாம் (முயற்சி மிக்க செயலாகும்). கி.வா.ஜ. சொன்னது: வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே எற்றோமற் றெற்றோமற் றெற்று. --ஔவையார் மேற்கோள்:’கவி பாடலாம்’, பக்.69 விளக்கம்: வெண்பா வகைப் பாடலை இருமுறை கற்பித்தும் கல்லானையும்; வெள்ளிய ஓலையில் கண்ணுக்குத் தெரியுமாறு கையால் எழுதத் தெரியாதவனையும்; பெற்ற தாய் பாவஞ் செய்திருக்க வேண்டும்; அவள் பெற்றது பிறர் அவளை ஏளனம் செய்வதற்கே; பேயே அவர்களை முக்காலும் தாக்குவாயாக, என்னை ஏன் தாக்குகிறாய்? பாடல் பின்னுள்ள கதை: https://groups.google.com/forum/#!topic/tamil_ulagam/amCdNYlwJxo ***** 11.01 வெண்பாவின் பொது இலக்கணம் (பலவிகற்ப இன்னிசை வெண்பா) இயற்சீராம் நான்குடன் வெண்சீராம் நான்கும் இயற்சீராம் வெண்டளையும் வெண்சீராம் வெண்டளையும் ஈற்றடி சிந்தடியாய் ஏனை அளவடியாய் ஏற்றது செப்பல் ஒலியென வாகிப் பயின்று வருகிற பாவகை வெண்பாவில் நால்வகை ஒன்றில் அசைச்சீர் இறுதியாம் நாள்மலர் காசு பிறப்பு. ... 1 வெண்பா இலக்கண விளக்கம் (பலவிகற்பப் பஃறொடை வெண்பா) வெண்பாவின் சீர்களாய் மாவிளம் காய்ச்சீராம் வெண்பாவில் நேர்நிரை மாறிவரும் வெண்டளையும் வெண்பாவில் காய்முன்நேர் வெண்சீரின் வெண்டளையும் வெண்பாவின் ஓசையென மூவகைச் செப்பலோசை வெண்பாவின் ஈற்றடி மூன்றுசீர்ச் சிந்தடியாம் வெண்பாவின் மற்றவடி நாற்சீர் அளவடியாம் வெண்பாவின் ஈற்றுச்சீர் ஓரசைச்சீர் நால்வகை நாள்-மலர் காசு பிறப்பு. ... 2 ஈற்றடி (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா) ஈற்றடி பேசுமே வெண்பாவின் தாற்பரியம் ஈற்றடி பேசுமே வெண்பா அலங்காரம் ஈற்றடி பேசுமே வெண்பாவின் சித்திரம் ஈற்றடியே வெண்பா உயிர். ... 3 ஈற்றுச்சீர் (ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா) இற்றிடும் சீரசை காசு பிறப்பெனில் குற்றுகரம் வந்து முடிதல் அவசியம் மற்ற உகரம் அரிது. ... 4 [இறுதல்=முடிதல்] வராதன (பலவிகற்ப இன்னிசை வெண்பா) வெண்பாவில் நான்கு கனிச்சீரும் வாராது வெண்பாவில் வேறு தளைகள் வராது அளவடி சிந்தடியே வேறடிகள் கூடா உளத்தினில் வைப்பீர் உகந்து. ... 5 பொழிப்பு மோனை (பலவிகற்பப் பஃறொடை வெண்பா) முதற்சீர் வருமெழுத்து மூன்றாம்சீர் ஒன்றும் விதம்பொழிப்பு மோனையாய் வெண்பா அடிதோறும் நிற்பதால் ஓசை நிறையும் செவிகளில் அற்பம் ஒரூஉவாம் மோனை வருவது சிற்சில பாக்களி லே. ... 6 பொழிப்பு எதுகை (பலவிகற்ப இன்னிசை வெண்பா) பொருளின் செறிவில் பொழிப்புமோ னையாய் வருதலிலை யென்றால் ஒருவெதுகை ஈடாக அந்த அடிகளில் வந்தபொழிப் பாம்-எதுகை உந்தி யமைவதும் உண்டு. ... 6 வகையுளி (பலவிகற்பப் பஃறொடை வெண்பா) வகையுளி யென்று வகுபடும் சொற்கள் வகையுளி பாவில் வருதல் பொதுவில் தகவுற இன்றித் தடுக்கும் பொருளோட்டம் சிற்சில போது சிறக்கும் வகையுளி முற்றப் பொருளின் நுகம். ... 7 [நுகம்=நுகத்தடி] (பலவிகற்ப இன்னிசை வெண்பா) வகையுளி ஈற்றடியில் வந்துநின்று வண்ணம் தகவுற நிற்கத் தழைக்கும் குறளாம் மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். ... 8 சான்று (ஒருவிகற்பக் குறள்வெண்பா) மேற்சொன்ன அத்தனை வெண்பா நலன்களும் மேற்கொண்ட வெண்பா வினி. ... 9 (இருவிகற்ப நேரிசை வெண்பா) ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. --ஔவையார், நல்வழி 12 அலகிடல்: சீர்கள் தேமா புளிமா புளிமா கருவிளங்காய் கூவிளங்காய் தேமா புளிமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா பிறப்பு தளைகள் இவெ இவெ இவெ வெவெ வெவெ இவெ வெவெ இவெ வெவெ வெவெ வெவெ இவெ வெவெ இவெ அடிகள் அளவடி அளவடி அளவடி சிந்தடி மோனை பொழிப்பு மோனை நான்கு அடிகளிலும் எதுகை இருவிகற்ப அடியெதுகை வகையுளி ஏதும் எங்கும் இல்லை இதர சான்றுகள் (மேலுள்ளது போல அலகிட்டு அறிக) (இருவிகற்ப நேரிசை வெண்பா) நமக்குத் தொழில்கவிதை; நாட்டுக் குழைத்தல் இமைப்போதும் சோரா திருத்தல் - உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான் சிந்தையே இம்மூன்றும் செய். --பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 25 நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி, அஞ்சிவுயிர் வாழ்தல் அறியாமை- தஞ்சமென்றே வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை ஐயமறப் பற்றல் அறிவு. --பாரதியார், மஹாசக்தி வெண்பா *****
10.00. பாவின் அடியும் ஓசையும்
கவிதையில் யாப்பு
ரமணி
பகுதி 2. செய்யுளியல் 10.00. பாவின் அடியும் ஓசையும் (நிலைமண்டில ஆசிரியப்பா) (வெறும்பா விரவியது) உறுப்பியல் பகுதியில் உறுப்புக ளாக எழுத்தசை சீர்தளை அடிதொடை என்னும் அறுவகை உறுப்புகள் எங்ஙனம் செய்யுளில் பயின்று வருமெனும் விளக்கம் கண்டபின் செய்யுள் இயலாம் இந்தப் பகுதியில் பாவடி யோசை பாவகை பாவினம் யாவையும் விளக்கிச் சொல்வோம் இனிதே. ... 1 10.01. பாவென்பது (நிலைமண்டில ஆசிரியப்பா) பாவெனும் சொல்லின் பலவிதப் பொருள்கள் பாவினை விளக்கப் புரிந்து கொண்டால் பாவெனச் சொல்வது யாதென விளங்குமே. ... 1 பாவெனில் முதலில் வருவது நெசவு பாவெனில் பஞ்சிநூல் என்றும் பொருளே பாவெனும் சொல்லின் ஓர்பொருள் பரப்பு பாவுதல் என்பது பரவுதல் படர்தல் பாத்தல் என்றால் பகுத்தல் வகுத்தலே. ... 2 இத்தனை பொருள்களும் நெசவினில் அடக்கம் நெய்வது நெசவு செய்வது செய்யுள் செய்யுளின் அடிப்படை உறுப்பே பாவாம். ... 3 (குறள் வெண்செந்துறை) ஆடை என்பது நெய்யப் படுவது செய்யுள் என்பது செய்யப் படுவது. ... 4 ஆடையில் பலநிற நூல்கள் பாவுதல் போலச் செய்யுளில் பலவிதப் பாக்கள் பாவுதல் உண்டு. ... 5 ஆடையில் ஒருநிறம் மட்டுமே வருவது போலச் செய்யுளில் ஒருவகைப் பாவே வருவதும் உண்டு. ... 6 ஆடையின் ஓசை வண்ணம் என்றால் ... [ஓசை=கீர்த்தி] செய்யுளின் வண்ணம் ஓசை எனலாம். ... 7 [வண்ணம்=தாளம்] நெய்பவர் எண்ணம் நிறங்களில் பேசும் செய்பவர் எண்ணம் ஓசையில் பேசும். ... 8 நெய்பவர் ஆடையில் நூல்கள் இழையும் செய்பவர் செய்யுளில் தொடையும் தளையும். ... 9 ஆடையின் வனப்பு நூல்களின் நிறங்களில் செய்யுளின் வனப்பு தளைதரும் ஓசையில். ... 10 அந்நூல் பாவி நடத்தலின் ஆடை ’அத்தொடை பாவி நடத்தலிற் பாவே.’ ... 11 --[இலக்.வி.711] ’அறம் பொருள் இன்பம் வீடு இவற்றைப் பாவி நடத்தலின் பாவென்பது.’ --[யாப்பருங்கலம் உரை] பாவும் நெசவும் பிணைந்தது போல நூலும் செய்யுளும் பிணைந்தது காணீர். ... 12 நூற்றல் என்றால் நூலிழை ஆக்குதல் நூற்றல்* என்பதே செய்யுள் இயற்றலும். ... 13 [*spinning a story என்று ஆங்கிலத்தில் சொல்வது செய்யுளுக்கும் பொருந்தும். இவ்வாறு நூற்றுச் செய்யப்படுவதால்தான் ஒரு புத்தகத்தை நூல் எனச் சொல்கிறோம்.] ஆடையின் சிறப்பு நூல்களால் இயல்வது பாவின் சிறப்பு சீர்களால் இயல்வது. ... 14 ஆடையின் சிறப்பில் நூல்கள் மறைந்து எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட. ... 15 பாவின் சிறப்பில் சீர்கள் மறைந்து எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட. ... 16 [வண்ணம்=தாளம்] ஆடையின் அழகு அணிந்திட வருமே பாவின் அழகு பாடிட வருமே. ... 17 10.02. பாவென்பது சீர், தளை, ஓசை (நிலைமண்டில ஆசிரியப்பா) பாவெனில் முதலில் சீரினைக் குறிக்கும். பாடலைக் குறிப்ப தாகு பெயரால் பாடலை இயற்றும் ஊடகம் செய்யுளே. ... 1 சீரெனில் பற்பல பொருள்வகை யாவதில் சீரெனில் பாட்டும் தாளமும் அடங்கும் சீரைப் பொறுத்தே பாவகை அதுபோல் பாவைப் பொறுத்தே சீர்வகை யாமே. ... 2 10.03. பாவும் சீரும் (நிலைமண்டில ஆசிரியப்பா) பாவின் உட்பொருள் சீரே என்பதால் பாவகை யாமே சீரின் பெயரே பாவின் பெயரே சீர்வகை யாகுமே பாவின் வகைகள் நால்வகை யாகும் ’ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென’. ... 1 --[தொல்.செய்.104] மாச்சீர் விளச்சீர் ஆசிரிய வுரிச்சீர் காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர் கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர் என்றிவ் வாறு பெயர்கள் பெற்று நான்கில் மூன்று பாவகை சுட்டுமே. ... 2 [தேமா புளிமா கருவிளம் கூவிளம்; மாங்காய் இரண்டு விளங்காய் இரண்டு; மாங்கனி இரண்டு விளங்கனி இரண்டு] 10.04. பாவும் தளையும் (நிலைமண்டில ஆசிரியப்பா) சீர்களைப் போலவே பாவகை சுட்டலில் சீரினும் மேலாய்ச் சீர்களால் இயலும் தளைகள் காட்டிடும் பாவகை நான்கே. ... 1 பாவகை பெயர்கொளும் தளைகள் ஏழில் மாமுன் நேரெனும் நேரொன் றாசிரியம் ... [நானும் நீயும்] விளமுன் நிரையெனும் நிரையொன் றாசிரியம் .. [அவனும் அவளும்] ஆகிய தளைகள் ஆசிரியப் பாவிலே. ... 2 மாமுன் நிரையும் விளம்முன் நேரும் ... [நானும் அவளும், ~அவளும் நானும்] பயில வந்திடும் இயற்சீர் வெண்டளை காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை ... [வருவேனா நானும்] இவ்விரு தளைகளும் வெண்பா வகையின. ... 3 கலிப்பா வுக்கெனத் தனிச்சீர் இல்லை காய்முன் நிரைவரும் கலித்தளை என்பது ... [வருவாளா அவளும்] கலிப்பா வகைக்கு உரிய தளையே. ... 4 கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியும் ... [அவளாவது வருவாள்] கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியும் ... [அவளாவது செல்வாள்] வஞ்சிப்பா வகைக்கு உரிய தளைகளே. ... 5 10.05. பாவும் ஓசையும் (நிலைமண்டில ஆசிரியப்பா) ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்கும். வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும். கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும். வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்குமே. ... 1 அகவல் செப்பல் துள்ளல் தூங்கல் ஓசையொவ் வொன்றும் மூவகை யாமே ஓசையின் வகைகள் பாவுடன் அறிவோம் தளைகள் தட்டினால் ஒலிசீர் கெட்டு பாவரும் செய்யுள் உரைநடை போலாம். ... 2 10.06. பாவகையும் இனமும் (நிலைமண்டில ஆசிரியப்பா) தொடையால் அடியால் இயற்றும் செய்யுள் பாவே பாவினம் எனவிரண் டாகும் அறம் பொருள் இன்பம் வீடெனும் இவற்றைப் பாவி நடத்தலால் பாவாம் பாவகை யோடே ஒத்த இனமாய் ஒருபுடை யாக வருவது பாவினம். ... 1 [புடை=முறை, ஒழுங்கு] 10.07. பாவின் வகைகள் (நிலைமண்டில ஆசிரியப்பா) பாவின் வகைகள் நான்கென் றமையும் வெண்பா ஆசிரியம் கலிப்பா வஞ்சி ஆசிரி யப்பா அகவற் பாவே. ... 1 நால்வகைப் பாவும் இருவகை அடங்கும் ஆசிரி யப்பா வெண்பா என்றே அகவல் நடைபோல் அமைவது வஞ்சி வெண்பா நடையைப் போன்றது கலிப்பா. ... 2 மருட்பா என்பது ஐந்தாம் வகையாம். வெண்பா முதலாய் அகவல் இறுதியில் கொண்டு தொடுப்பது மருட்பா வாகும். ... [யா.வி.] பாவகை குறித்த அடிகளால் அமையுமே. ... 3 10.08. பாவின் இனங்கள் (நிலைமண்டில ஆசிரியப்பா) பாவகை நான்கிலும் மூவகை யினமாம் பாவகை இலக்கணம் முழுமை யின்றிப் பாவகை ஓசையை ஒட்டி வருவது பாவகை யதனின் பாவின மாமே பாவினம் குறித்த அடிகளால் அமையுமே. ... 1 ஒவ்வொரு பாவகை யோடுறும் மூவினம் ’தாழிசை துறையே விருத்தம் என்றிவை பாவினம் பாவொரு பாற்பட் டியலும்’ ... [யா.வி.] ... 2 பாவுடன் கூடிப் பாவினம் நடக்கும் வெண்டா ழிசையும் வெண்டுறை யுடனே வெளிவிருத் தமெனும் மூன்றாம் இனமாய் வெண்பா வினங்கள் பெயர்கள் பெறுமே. ... 3 ஆசிரியத் தாழிசை ஆசிரி யத்துறை ஆசிரிய விருத்தம் என்றமூ வினமாய் அகவற் பாவினம் பெயர்கள் பெறுமே. ... 4 கலித்தா ழிசையும் கலித் துறையோடு கலிவிருத் தமென்றே கலிப்பா மூவினம் ஒலிக்கும் பெயர்கள் பெற்று வருமே. ... 5 வஞ்சித் தாழிசை வஞ்சித் துறையும் வஞ்சி விருத்தமும் வஞ்சிப் பாவினம் ஒலிக்கும் பெயர்கள் பெற்று வருமே. ... 6 தாழம் என்பது தாழ்ந்த ஓசை தத்தம் பாவொடு ஒத்த தாழத்தால் ஒத்த பொருளால் இசைப்பது தாழிசை. ... 7 தத்தம் பாவிற்குத் துறைபோல் நெறியுடன் ஒத்து நடப்பது துறையெனும் பாவினம். தத்தம் பாவெனும் ஒழுங்கில் அடியில் ஒத்து புராணம் முதலிய விருத்தம் உரைப்பது விருத்தம் எனும்பா வினமே. ... 8 10.09. பாவகை அடியும் ஓசையும் (நிலைமண்டில ஆசிரியப்பா) பாடல் ஒன்றைப் படிக்கும் போது கண்ணில் தெரிவது பாவின் அடிகள் காதில் கேட்பது பாவின் ஓசை. ... 1 பாவகை இலக்கணம் பயிலும் முன்னர் பாவகை அடிகளின் அமைப்பும் ஓசையும் முதலில் தெரிந்து கொள்ளல் வேண்டுமே. ... 2 யாப்பின் வழக்கில் குறளெனில் இரண்டு சிந்தெனில் மூன்று அளவெனில் நான்கு நெடிலெனில் ஐந்து கழிநெடில் ஐந்தின் அதிகம் எனும்பொரு ளாமே. ... 3 குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடி லடியெனும் பேரில் முறையே இரண்டும் மூன்றும் நான்கும் ஐந்தும் ஆறும் மேலும் சீர்கள் பெற்று அடிகளின் வகைகள் ஐந்தில் அமையுமே. ... 4 பாவடி பற்றிய காரிகை நூற்பா வெண்பா அகவல் கலிப்பா அளவடி வஞ்சியெனும் ஒண்பா குறளடி சிந்தடி. --[யா.கா.21] வெண்பா நாற்சீர் அளவடி கொளுமே அகவல் நாற்சீர் அளவடி கொளுமே கலிப்பா நாற்சீர் அளவடி கொளுமே வஞ்சிப் பாவெனில் இருசீர்க் குறளடி முச்சீர்ச் சிந்தடி இரண்டும் கொளுமே. பாவகை யடிகள் பொதுவில் இவையே பாவகை பொறுத்து வேற்றடி விரவுமே. ... 5 ’திண்பாமலி செப்பல்’என வெண்பா விற்கும் ’சீர்சால் அகவல்’என அகவற்பா விற்கும் ’சென்றோங்கு துள்ளல்’என கலிப்பா விற்கும் ’நலமிகு தூங்கல்’என வஞ்சிப்பா விற்கும் ஓசைகள் கூறிக் காரிகை விளக்குமே. ... 6 தளைகள் மூலமே ஓசைகள் அமையும் ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்கும் வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும் கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும் வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்கும் தளைகளின் விளக்கம் மேலே அறிக. ... 7 *****
Thursday, April 20, 2017
8.90. செந்தொடை
கவிதையில் யாப்பு
ரமணி
8.90. செந்தொடை (தனிச்சொல் பெற்ற நிலைமண்டில ஆசிரியப்பா) ஒன்றிய தொடையொடும் விகற்பம் தம்மொடும் ஒன்றாது கிடப்பது செந்தொடை தானே. ... (யாப்பருங்கல விருத்தி) செவ்விய தொடையொடு வேறுபட் டியலின் சொல்லியற் புலவரது செந்தொடை என்ப. ... (தொல்காப்பியம்) அசையினும் சீரினும் இசையினும் எல்லாம் இசையா தாவது செந்தொடை தானே. ... (பல்காயனார்) இங்ஙனம் எவ்விதத் தொடையும் இல்லா திருந்தும் செவ்விதின் அமைந்து செய்யுளாய்ச் சீர்த்து நவ்விடும் ஓசை நலன்கள் விளையச் செய்வது செந்தொடை இலக்கணம் என்போம். ... 1 (ஆசிரியத் தாழிசை) இயல்பில் மாலையாய் இலங்கும் . கடம்பக் கொன்றை மலர்கள் போலச் செயற்கைத் தொடையேதும் வேண்டாது . செய்யுளைச் சிறப்பித்து நிற்றலால் இத்தொடை செந்தொடை யென்னும் பெயர்தனைப் . பெற்றுச் செம்மையாய் நின்றிடும் தொடையாம். --யாப்பருங்கலக் காரிகை, குமாரசாமிப் புலவர் உரை, பக்.40 சான்று பூத்த வேங்கை வியன்சினை ஏறி மயிலினம் அகவும் நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே. --யா.கா.மேற்கோள் விளக்கம் (நிலைமண்டில ஆசிரியப்பா) பொன்னிறப் பூக்களை உடையது வேங்கை அந்த மரத்தின் உயர்ந்தவோர் கிளையில் ஏறிநின்று அகவும் வண்ணமயில் நாடன் அழகிய நெற்றிக் குறிஞ்சிப் பெண்ணின் உள்ளம் நிறைந்து நிற்பவன் ஆவனே. ... 2 மேல்வரும் விளக்கம் செய்யுள் ஆயினும் உரைநடை வழக்கின் சீர்தளை நிறைந்து ஓசை சிதறி ஒழுங்கற்று நிற்பதால் செந்தொடை பயிலும் செய்யுள் ஆகாது; ஆக்குவோம் இதனைச் செந்தொடைச் செய்யுளாய். ... 3 பொன்னிறப் பூநிறை வேங்கை மரத்தின் வான்கிளை ஏறி அகவுமயி லொன்று நாடனே எழில்நுதல் குறிஞ்சி மகளின் மனத்தகத் துறையும் தலைவ னாவனே. ... 4 ***** 8.91. செந்தொடை முயற்சி (குறள் வெண்செந்துறை) செந்தொடை அடிகளில் பொருணயம் வேண்டும் அந்த வகையில் முயன்றவை கீழே. ... 1 (நிலைமண்டில ஆசிரியப்பா) கருவறை இருட்டு. குத்து விளக்கின் சுடரொளி எதற்கோ உன்னிக் குதிக்கிறது. அம்பாள் முகத்தில் புன்னகை கண்டோ? தாயன்பில் சேய்க்கை நீளுதல் போலவோ? ... 2 (ஆசிரியத்துறை) சர்ப்பமாய் வளைந்து செல்லும் தார்ச்சாலை. ஆனைகள் தடுக்க ஒருபுறம் பள்ளம். மறுபுறம் மின்கம்பி வேலி. வெள்ளியங் கிரிமலை நோக்கி யொருகார். ... 3 (நிலைமண்டில ஆசிரியப்பா) சாலையில் காதொற்றும் செல்போன் இடக்கையில். வலக்கை பற்றி நடக்கும் குழந்தை. காட்டாறு வெள்ளமாய் விரையும் வாகனங்கள். கணங்கள் ஓடும் நிகழும் உறையுமே. ... 4 எதிரே மாரியம்மன் கோவில் திண்ணை. இடப்புறம் ஊராட்சிப் பொதுமேடை. கொடிக்கம்பம். பின்புறம் பூங்காவில் வானொலிச் செய்தி. மணலில் துப்புரவுத் துடைப்பக் கீற்றுகள். ... 5 *****
Subscribe to:
Posts (Atom)