Thursday, April 27, 2017

10.00. பாவின் அடியும் ஓசையும்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

பகுதி 2. செய்யுளியல்
10.00. பாவின் அடியும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
(வெறும்பா விரவியது)

உறுப்பியல் பகுதியில் உறுப்புக ளாக
எழுத்தசை சீர்தளை அடிதொடை என்னும்
அறுவகை உறுப்புகள் எங்ஙனம் செய்யுளில்
பயின்று வருமெனும் விளக்கம் கண்டபின்
செய்யுள் இயலாம் இந்தப் பகுதியில்
பாவடி யோசை பாவகை பாவினம்
யாவையும் விளக்கிச் சொல்வோம் இனிதே. ... 1

10.01. பாவென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவெனும் சொல்லின் பலவிதப் பொருள்கள்
பாவினை விளக்கப் புரிந்து கொண்டால்
பாவெனச் சொல்வது யாதென விளங்குமே. ... 1

பாவெனில் முதலில் வருவது நெசவு
பாவெனில் பஞ்சிநூல் என்றும் பொருளே
பாவெனும் சொல்லின் ஓர்பொருள் பரப்பு
பாவுதல் என்பது பரவுதல் படர்தல்
பாத்தல் என்றால் பகுத்தல் வகுத்தலே. ... 2

இத்தனை பொருள்களும் நெசவினில் அடக்கம்
நெய்வது நெசவு செய்வது செய்யுள்
செய்யுளின் அடிப்படை உறுப்பே பாவாம். ... 3

(குறள் வெண்செந்துறை)
ஆடை என்பது நெய்யப் படுவது
செய்யுள் என்பது செய்யப் படுவது. ... 4

ஆடையில் பலநிற நூல்கள் பாவுதல் போலச்
செய்யுளில் பலவிதப் பாக்கள் பாவுதல் உண்டு. ... 5

ஆடையில் ஒருநிறம் மட்டுமே வருவது போலச்
செய்யுளில் ஒருவகைப் பாவே வருவதும் உண்டு. ... 6

ஆடையின் ஓசை வண்ணம் என்றால் ... [ஓசை=கீர்த்தி]
செய்யுளின் வண்ணம் ஓசை எனலாம். ... 7
[வண்ணம்=தாளம்]

நெய்பவர் எண்ணம் நிறங்களில் பேசும்
செய்பவர் எண்ணம் ஓசையில் பேசும். ... 8

நெய்பவர் ஆடையில் நூல்கள் இழையும்
செய்பவர் செய்யுளில் தொடையும் தளையும். ... 9

ஆடையின் வனப்பு நூல்களின் நிறங்களில்
செய்யுளின் வனப்பு தளைதரும் ஓசையில். ... 10

அந்நூல் பாவி நடத்தலின் ஆடை
’அத்தொடை பாவி நடத்தலிற் பாவே.’  ... 11
--[இலக்.வி.711]

’அறம் பொருள் இன்பம் வீடு
இவற்றைப் பாவி நடத்தலின் பாவென்பது.’ 
--[யாப்பருங்கலம் உரை]

பாவும் நெசவும் பிணைந்தது போல
நூலும் செய்யுளும் பிணைந்தது காணீர். ... 12

நூற்றல் என்றால் நூலிழை ஆக்குதல்
நூற்றல்* என்பதே செய்யுள் இயற்றலும். ... 13

[*spinning a story என்று ஆங்கிலத்தில் சொல்வது
செய்யுளுக்கும் பொருந்தும். இவ்வாறு நூற்றுச் 
செய்யப்படுவதால்தான் ஒரு புத்தகத்தை 
நூல் எனச் சொல்கிறோம்.]

ஆடையின் சிறப்பு நூல்களால் இயல்வது
பாவின் சிறப்பு சீர்களால் இயல்வது. ... 14

ஆடையின் சிறப்பில் நூல்கள் மறைந்து
எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட. ... 15

பாவின் சிறப்பில் சீர்கள் மறைந்து
எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட. ... 16
[வண்ணம்=தாளம்]

ஆடையின் அழகு அணிந்திட வருமே
பாவின் அழகு பாடிட வருமே. ... 17

10.02. பாவென்பது சீர், தளை, ஓசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவெனில் முதலில் சீரினைக் குறிக்கும்.
பாடலைக் குறிப்ப தாகு பெயரால்
பாடலை இயற்றும் ஊடகம் செய்யுளே. ... 1

சீரெனில் பற்பல பொருள்வகை யாவதில்
சீரெனில் பாட்டும் தாளமும் அடங்கும்
சீரைப் பொறுத்தே பாவகை அதுபோல்
பாவைப் பொறுத்தே சீர்வகை யாமே. ... 2

10.03. பாவும் சீரும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவின் உட்பொருள் சீரே என்பதால்
பாவகை யாமே சீரின் பெயரே
பாவின் பெயரே சீர்வகை யாகுமே 
பாவின் வகைகள் நால்வகை யாகும்
’ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென’. ... 1 
--[தொல்.செய்.104]

மாச்சீர் விளச்சீர் ஆசிரிய வுரிச்சீர்
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர்
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர்
என்றிவ் வாறு பெயர்கள் பெற்று
நான்கில் மூன்று பாவகை சுட்டுமே. ... 2

[தேமா புளிமா கருவிளம் கூவிளம்;
மாங்காய் இரண்டு விளங்காய் இரண்டு;
மாங்கனி இரண்டு விளங்கனி இரண்டு]

10.04. பாவும் தளையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீர்களைப் போலவே பாவகை சுட்டலில்
சீரினும் மேலாய்ச் சீர்களால் இயலும்
தளைகள் காட்டிடும் பாவகை நான்கே. ... 1

பாவகை பெயர்கொளும் தளைகள் ஏழில்
மாமுன் நேரெனும் நேரொன் றாசிரியம் ... [நானும் நீயும்]
விளமுன் நிரையெனும் நிரையொன் றாசிரியம் .. [அவனும் அவளும்]
ஆகிய தளைகள் ஆசிரியப் பாவிலே. ... 2

மாமுன் நிரையும் விளம்முன் நேரும் ... [நானும் அவளும், ~அவளும் நானும்]
பயில வந்திடும் இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை ... [வருவேனா நானும்]
இவ்விரு தளைகளும் வெண்பா வகையின. ... 3

கலிப்பா வுக்கெனத் தனிச்சீர் இல்லை
காய்முன் நிரைவரும் கலித்தளை என்பது ... [வருவாளா அவளும்]
கலிப்பா வகைக்கு உரிய தளையே. ... 4

கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியும் ... [அவளாவது வருவாள்]
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியும் ... [அவளாவது செல்வாள்]
வஞ்சிப்பா வகைக்கு உரிய தளைகளே. ... 5

10.05. பாவும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்கும்.
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும்.
கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும்.
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்குமே. ... 1

அகவல் செப்பல் துள்ளல் தூங்கல்
ஓசையொவ் வொன்றும் மூவகை யாமே
ஓசையின் வகைகள் பாவுடன் அறிவோம்
தளைகள் தட்டினால் ஒலிசீர் கெட்டு
பாவரும் செய்யுள் உரைநடை போலாம். ... 2

10.06. பாவகையும் இனமும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொடையால் அடியால் இயற்றும் செய்யுள்
பாவே பாவினம் எனவிரண் டாகும்
அறம் பொருள் இன்பம் வீடெனும்
இவற்றைப் பாவி நடத்தலால் பாவாம்
பாவகை யோடே ஒத்த இனமாய்
ஒருபுடை யாக வருவது பாவினம். ... 1

[புடை=முறை, ஒழுங்கு]

10.07. பாவின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவின் வகைகள் நான்கென் றமையும்
வெண்பா ஆசிரியம் கலிப்பா வஞ்சி
ஆசிரி யப்பா அகவற் பாவே. ... 1

நால்வகைப் பாவும் இருவகை அடங்கும்
ஆசிரி யப்பா வெண்பா என்றே
அகவல் நடைபோல் அமைவது வஞ்சி
வெண்பா நடையைப் போன்றது கலிப்பா. ... 2

மருட்பா என்பது ஐந்தாம் வகையாம்.
வெண்பா முதலாய் அகவல் இறுதியில்
கொண்டு தொடுப்பது மருட்பா வாகும். ... [யா.வி.]
பாவகை குறித்த அடிகளால் அமையுமே. ... 3

10.08. பாவின் இனங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவகை நான்கிலும் மூவகை யினமாம்
பாவகை இலக்கணம் முழுமை யின்றிப்
பாவகை ஓசையை ஒட்டி வருவது
பாவகை யதனின் பாவின மாமே
பாவினம் குறித்த அடிகளால் அமையுமே. ... 1

ஒவ்வொரு பாவகை யோடுறும் மூவினம்
’தாழிசை துறையே விருத்தம் என்றிவை
பாவினம் பாவொரு பாற்பட் டியலும்’ ... [யா.வி.] ... 2

பாவுடன் கூடிப் பாவினம் நடக்கும்
வெண்டா ழிசையும் வெண்டுறை யுடனே
வெளிவிருத் தமெனும் மூன்றாம் இனமாய்
வெண்பா வினங்கள் பெயர்கள் பெறுமே. ... 3

ஆசிரியத் தாழிசை ஆசிரி யத்துறை
ஆசிரிய விருத்தம் என்றமூ வினமாய்
அகவற் பாவினம் பெயர்கள் பெறுமே. ... 4

கலித்தா ழிசையும் கலித் துறையோடு
கலிவிருத் தமென்றே கலிப்பா மூவினம்
ஒலிக்கும் பெயர்கள் பெற்று வருமே. ... 5

வஞ்சித் தாழிசை வஞ்சித் துறையும்
வஞ்சி விருத்தமும் வஞ்சிப் பாவினம்
ஒலிக்கும் பெயர்கள் பெற்று வருமே. ... 6

தாழம் என்பது தாழ்ந்த ஓசை
தத்தம் பாவொடு ஒத்த தாழத்தால்
ஒத்த பொருளால் இசைப்பது தாழிசை. ... 7

தத்தம் பாவிற்குத் துறைபோல் நெறியுடன்
ஒத்து நடப்பது துறையெனும் பாவினம்.
தத்தம் பாவெனும் ஒழுங்கில் அடியில்
ஒத்து புராணம் முதலிய விருத்தம்
உரைப்பது விருத்தம் எனும்பா வினமே. ... 8

10.09. பாவகை அடியும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாடல் ஒன்றைப் படிக்கும் போது
கண்ணில் தெரிவது பாவின் அடிகள்
காதில் கேட்பது பாவின் ஓசை. ... 1

பாவகை இலக்கணம் பயிலும் முன்னர்
பாவகை அடிகளின் அமைப்பும் ஓசையும்
முதலில் தெரிந்து கொள்ளல் வேண்டுமே. ... 2

யாப்பின் வழக்கில் குறளெனில் இரண்டு
சிந்தெனில் மூன்று அளவெனில் நான்கு
நெடிலெனில் ஐந்து கழிநெடில்
ஐந்தின் அதிகம் எனும்பொரு ளாமே. ... 3

குறளடி சிந்தடி அளவடி நெடிலடி 
கழிநெடி லடியெனும் பேரில் முறையே
இரண்டும் மூன்றும் நான்கும் ஐந்தும் 
ஆறும் மேலும் சீர்கள் பெற்று
அடிகளின் வகைகள் ஐந்தில் அமையுமே. ... 4

பாவடி பற்றிய காரிகை நூற்பா
வெண்பா அகவல் கலிப்பா அளவடி
வஞ்சியெனும் ஒண்பா குறளடி சிந்தடி.
--[யா.கா.21]

வெண்பா நாற்சீர் அளவடி கொளுமே
அகவல் நாற்சீர் அளவடி கொளுமே
கலிப்பா நாற்சீர் அளவடி கொளுமே
வஞ்சிப் பாவெனில் இருசீர்க் குறளடி
முச்சீர்ச் சிந்தடி இரண்டும் கொளுமே.
பாவகை யடிகள் பொதுவில் இவையே
பாவகை பொறுத்து வேற்றடி விரவுமே. ... 5

’திண்பாமலி செப்பல்’என வெண்பா விற்கும்
’சீர்சால் அகவல்’என அகவற்பா விற்கும்
’சென்றோங்கு துள்ளல்’என கலிப்பா விற்கும்
’நலமிகு தூங்கல்’என வஞ்சிப்பா விற்கும்
ஓசைகள் கூறிக் காரிகை விளக்குமே. ... 6

தளைகள் மூலமே ஓசைகள் அமையும்
ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்கும்
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும்
கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும்
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்கும்
தளைகளின் விளக்கம் மேலே அறிக. ... 7

*****

No comments:

Post a Comment