Wednesday, May 3, 2017

11.02 வெண்பாவின் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.02 வெண்பாவின் சீர்
(வெண்பா)

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
அகவற்சீர் நால்வகை யாகும் இயற்சீர்
தகவுடன் வெண்பா வுரிச்சீர் எனப்படும்
காய்ச்சீர்கள் நால்வகையும் காணலாம் வெண்பாவில்
நால்வகை ஒன்றில் அசைச்சீராம் ஈற்றடியில்
நாள்மலர் காசு பிறப்பு. ... 1

தேமா புளிமா கருவிளம் கூவிளமென்
றேமாப் பெயர்-இயற்சீர் ஈரசையாம் நான்குடன்
ஈரசை யோடொரு நேரசை சேரும்
இருவகைக் காய்ச்சீர்கள் நான்கென்று மொத்தமாய்
எண்வகைச் சீர்களும் வந்தமரும் வெண்பாவே
ஒண்பாவாய் நிற்கும் ஒளிர்ந்து. ... 2

(ஒருவிகற்பக் குறள்வெண்பா)
கனிச்சீர்கள் நான்கையும் காணாவெண் பாவென்(று)
அனிச்ச மலராய் அறி. ... 3

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
காளமே கப்புலவர் பாடியவிப் பாடலில்
ஆள்கனிச் சீரோ முதலடிச் சீர்மூன்றில்?
தாளம் தவறா? தளைதட்டல் உள்ளதா?
வாளைமீன் போலோர் வழுக்கு! ... 4

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.

நாத(ர்)முடி என்றால் இடையின வொற்றாம்-இர்
யாதொன்றும் கொள்ளா(து) அலகெனவே - நாதமுடி;
தாளம் தவறாத் தளைதட்டா வெண்பாவாம்
காளமேகர் வெண்பாக் கவி. ... 5

11.03 வெண்பாவில் ’விளாங்காய்ச்சீர்’

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
நிரைநடு வாய்வரும் காய்ச்சீர் இரண்டு
கருவிளங் கூவிளங் காய்ச்சீர் எனவே
நிரையிற் குறிலிணை, ஒற்றுடன் என்றால்
நிரைநடு காய்ச்சீர் ஒலிபிற ழாது
நிரையிற் குறில்நெடில், ஒற்றுடன் என்றால்
நிரைநடு காய்ச்சீர் ஒலிபிறழ் வாமென
அன்றுநம் முன்னோர் அறிந்துவெண் பாவினில்
நன்றல என்றிவ் வகைப்படும் சீர்கள்
பெரிதும் தவிர்த்தே இயற்றினர் வெண்பா
அரிதெனக் காண்போம் அவை. ... 1

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கீழ்வரும் வெண்பாவில் நாற்சீர் விளாங்காயென்
றாழ்ந்துவரும் ஓசையை ஆய்ந்தறி யும்செவியால்
மாற்றுவோம் பாவை வகயுளி யாகவோ
மாற்றெனச் சீரமைத் தோ. ... 2

ஒருவிகற்பக் குறட்பா
(சிர்கள் 1, 3, 5, 6-இல் விளாங்காய்)

வேர்ப்பலாவின் தீங்கனி வெட்டியேநாம் தேனுடன்
சேர்த்தவாறே உண்பமேயென் றே.

ஒருவிகற்பக் குறட்பா
(வகையுளி செய்து விளாங்காய்ச்சீர் நீக்கியது)

வேர்ப்பலா வின்தீங் கனிவெட்டி யேதேனைச்
சேர்த்தவா றேயுண்போம் நாம்.

ஒருவிகற்பக் குறட்பா
(வகையுளி யின்றி விளாங்காய்ச்சீர் நீக்கியது)

வேர்ப்பலாத் தீங்கனி வெட்டியே தேன்தடவிச்
சேர்த்தபடி உண்போமே நாம்.

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
விளங்காய் நிரைநடுச் சீர்களில் இங்ஙன்
குறில்நெடில் ஒற்றுடன் கூடி வருதல்
விளாங்காய்ச்சீர் என்பதாம் இந்நாள் வழக்கு
விளாங்காய்ச்சீர் வந்தமைய வெண்பா வியற்றல்
இலக்கணத் தப்பென வில்லை யெனினும்
ஒலிபிறழ் வென்று தவிர்த்தே அவற்றைநாம்
தள்ளிவி யற்றல் தகை. ... 3

11.04 வெண்பாவின் ஈற்றுச்சீர்
(வெண்பா)

அசைச்சீர் வாய்பாடு
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச்சீர் நால்வகையில்
பண்பட்டு வந்துநிற்கும் ஓரசையாய் - உண்டாகும்
நாள்,மலர் காசு பிறப்பெனும் வாய்பாட்டில்
நால்வகையில் நிற்கும் இசைந்து. ... 1

அசைச்சீரின் அசைகள்
(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நேர்,நிரை நேர்பு நிரைபு எனவொன்றில்
ஓரசையாய் நிற்கும் உவந்து. ... 2

நாள் மலர்
(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நேர்தனியே வந்திட நாளென் றறிக
நிரைதனியே வந்தால் மலர். ... 3

[உதாரணம்: நாள்: கு, தா, கல், சொல்]
மலர்: உள, உளம், கலா, கலாம்]

காசு பிறப்பு
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
ஒற்றைக் குறில்தவிர்த்த நேருடன் குற்றுகரம்
சேர்வது காசெனும் நேர்பு; நிரையுடன்
சேர்ந்தால் பிறப்பாம் நிரைபு. ... 4 

தனிக்குறில் ஒற்றுடன், ஒற்றுடன் ஓர்நெடில்,
அன்றித் தனிநெடில், ஆகிய நேரசை
மூன்றுடன் குற்றுகரம் சேர்ந்து வருவது
காசெனும் நேர்பா வது. ... 5

[காசு உதாரணம்: கொக்கு, மூப்பு, வீடு]

குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
தனியாக, ஒற்றடுத்து வந்திடும் நான்கு
நிரையசை யோடொரு குற்றுகரம் சேர்வதால்
ஆகும் நிரைபு பிறப்பு. ... 6

[பிறப்பு உதாரணம்: சிறகு, சிறப்பு, வரைவு, இசைந்து]

(இருவிகற்பக் குறள் வெண்பா)
குற்றுகரம் ஆகும் குசுடு துபுறு
உயிர்மெய் எழுத்துகள் காண். ... 7

ஈற்றடியில் வாய்பாட்டுச் சொல்
(இருவிகற்பக் குறள் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
வந்திடுமோ வாய்பாட்டுச் சொல்? ... 8

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
நாளெனும் சொல்நேர் எனவே வரலாம்
மலர்ச்சொல் வரலாம் தனிநிரை யாவதால்
காசுச்சொல் ஆகும்நேர் பின்குற் றுகரம்
பிறப்புச்சொல் ஆகுநிரை பின்குற் றுகரம்
இரண்டும் வருமீற்றுச் சீர். ... 9

(இருவிகற்பக் குறள் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நாள்,மலர் காசு பிறப்பு. ... 10

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வேறெந்தச் சீராக நாள்மலர் கூடாது
ஓரசைச்சீர் என்றவை யாவதால் - வேறுவகைப்
பாவிலும் வாரா கலிப்பா உறுப்பான
அம்போத ரங்கம் தவிர்த்து. ... 11

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வேறெந்தச் சீராகக் காசு பிறப்பு
வரலாம் எனினும் அதுபோல வந்தாலோ
இங்கு முதலடியில் உள்ளது போலவே
ஈரசைச் சீர்களாகும் காண். ... 12

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வேறடியில் காசு பிறப்பு வரலாம்
நிரை-நேர் எனப்பிறப்பும் நேர்-நேர் எனக்காசும்
ஈரசைச் சீர்களாகும் காண். ... 13

ஈற்றுச் சீர் சான்றுகள்
(ஒருவிகற்பக் குறள் வெண்பா)

நாள்மலர் காசு பிறப்பென ஈற்றுச்சொல்
ஆள்குறட் பாவெழுது வோம். ... 14

மடம்பயிர்ப்பு நாணம் மனவச்சம் இன்றி
நடமாடும் பெண்டிரிந் நாள்.

மங்கை தலையமரும் மல்லிகைப் பூவெனில்
மங்கையும் தானே மலர்?

படும்பாட்டில் இல்லாள் பதுக்கியே சேர்த்தாள்
கடுகுச் சிமிழினுள் காசு!

எருமைகள் மேய்த்தாலும் ஈசன்பேர் சொல்லப்
பெருமைகள் சேரும் பிறப்பு.

*****

No comments:

Post a Comment