Thursday, April 20, 2017

8.70. அளபெடைத் தொடை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.70. அளபெடைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அளபெடை என்பது மாத்திரை நீளுதல்
அளபெடை யிருவகை: உயிரும் ஒற்றும்
’அளபெடை ஒன்றுவ தளபெடைத் தொடையே’. 
-- (யாப்பருங்கலம்) ... 1.

உயிரள பெடையில் பயில்வரும் எழுத்துகள்
உயிரின் உயிர்மெய் நெடில்கள் ஏழு:
அளபெடுக் கையிலோர் இனவெழுத் தெழுமே
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ. ... 2.

ஒற்றள பெடையில் பயில்வரும் எழுத்துகள்
நீண்டு ஒலிக்கும் பதினொரு எழுத்துகள்
ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
அளபெடுக் கையிலவை மீண்டும் வருமே. ... 3.

உயிரளபெடை
உயிரள பெடைத்தொடை தோன்றும் இடங்கள்:
’தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென
நால்வகைப் படூஉமள பாய்வரும் இடனே’. 
... (யாப்பருங்கல விளக்கம்) ... 4.

தனிநிலை
முன்பின் எழுத்தின்றி முதற்சீர் நின்று
ஒன்றே எழுத்து அளபெடுத் தொன்றுதல்
தனிநிலை உயிரள பெடையெனப் படுமே.
ஓரெழுத் திப்படி அளபெடுத் தொன்றிட
ஈரடி வேண்டும் என்பதை யறிக. ... 5.

சான்று:
ஏஎ வழங்கும் சிலையாய் இரவாரல்
மாஅ வழங்கும் வரை.
--யாப்பருங்கலம்

முதனிலை
முதற்சீர் நின்று முதலெழுத் தளபெடுத்து
அதன்பின்னும் எழுத்துவந்(து) ஈரடியில் அமைவது 
முதனிலை உயிரள பெடையெனப் படுமே. ... 6.

சான்று
காஅரி கொண்டான் கதச்சோ மதனழித்தான்
ஆஅழி ஏந்தல் அவன்.
--யாப்பருங்கலம்

இறுதிநிலை
முதற்சீர் இறுதிவரும் எழுத்தள பெடுத்து
அதன்பின் வருமடி முதற்சீரில் ஒன்றுவது
இறுதிநிலை உயிரள பெடையெனப் படுமே. ... 7.

சான்று
கடாஅக் களிற்றின்மேல் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.
--யாப்பருங்கலம்

இடைநிலை
முதற்சீர் நடுவரும் எழுத்தள பெடுத்து
அதன்பின் வருமடி முதற்சீரில் ஒன்றுவது
இடைநிலை உயிரள பெடையெனப் படுமே. ... 8.

சான்று
உராஅய தேவர்க் கொழிக்கலு மாமோ
விராஅய கோதை விளர்ப்பு.
--யாப்பருங்கலம்

ஒற்றளபெடை
குறிலின் குறிலிணைக் கீழ்வரும் ஒற்று
இடைகடை அளபெடுத்து மிக்கு வருவதால்
இடைகடை வருமே ஒற்றள பெடைத்தொகை. ... 9.

சான்று: இடைநிலை ஒற்று
வண்ண்டு வாழும் மலர்நெடுக் கூந்தலாள்
பண்ண்டை நீர்மை பரிது.
--யாப்பருங்கலம்

சான்று: இறுதிநிலை ஒற்று
உரன்ன் அமைந்த உணர்வினா ராயின்
அரண்ண் அவர்திறத் தில்.
--யாப்பருங்கலம்

8.71 அளபெடைத் தொடை விகற்பங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதுகை போலவே அளபெடைத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே. ... 1.

அளபெடைத் தொடை விகற்பச் சான்றுகள்
அடியளபெடை தொடை

ஆஅ அளிய அலவன்றன் பார்ப்பினோ
டீஇர் இசையுங்கொண் டீரளைப் பள்ளியுள்
தூஉம் திரையலைப்பத் துஞ்சா துறைவன்றோள்
மேஎ வலைப்பட்ட நம்போல் நறநுதால்
ஓஒ உழைக்கும் துயர்.
--யாப்பருங்கலம்

ஓரடிக்குள் அளபெடைத் தொடை
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)

காஅலைப் போஒதில் கால்கள் நடந்திடச் ... 1-2 இணை
சாஅலை யோரத்தில் காஅட்சி இங்ஙனம்: ... 1-3 பொழிப்பு
வேஎலை செல்லும் விழிவழி மாஅதர் ... 1-4 ஒரூஉ
காஅலை மாஅலை சாஅலை ஈர்ப்பரே ... 1-2-3 கூழை
வாஅனம் மீதொரு காஅனம் கேஎட்கும் ... 1-3-4 மேற்கதுவாய் ... 5
சாஅலை யோஒரம் சோலையில் பூஉக்கள் ... 1-2-4 கீழ்க்கதுவாய்
காஅனம் காஅலை வாஅனம் யாஅவும் ... 1-2-3-4 முற்று 
நாணக் குமரியை நல்வர வேற்குமே!
சிக்கும் அளபெடை வெண்பா எழுதியே
திக்கிக் குழன்ன்றே பேசு! ... 10

*****

1 comment:

  1. Casino at Rancheria - Mapyro
    This casino 평택 출장샵 is a 3 star resort. With a hotel 원주 출장마사지 and casino, it provides a perfect location to explore Las 세종특별자치 출장샵 Vegas, 제주도 출장안마 NV on a 나주 출장안마 river.

    ReplyDelete