Thursday, December 15, 2016

7.10. அளவடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.10. அளவடி முயற்சிி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அளவடி நாமும் முயன்றிடு வோமா?
அளவடி பயிலும் பாவகை அனைத்தும்
ஒருகை பார்ப்போம் சிறுகை யாயினும்! ... 1

ஆசிரியப்பா முயற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அகவற் பாவொன்று தகவுடன் புனைய
குறைந்தது மூன்று அடிகள் தன்னில்
மாமுன் நேரும் விளமுன் நிரைவரும்
ஆசிரியத் தளைகள் சீரிடை அடியிடை
மாசற ஒன்றிப் பிறதளை விரவுமே! ... 2

உள்ளுவ தனைத்திலு முயர்ந்ததே உறைந்து
தள்ளுவ தனைத்தும் தள்ளி வாழ்ந்தால்
வளமாய் மண்ணில் வாழ்க்கை நடக்குமே. ... 3

கூவிளம் கருவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் புளிமா தேமா தேமா
புளிமா தேமா தேமா கருவிளம்

உள்/ளுவ(து) (நிஆ) அனைத்/திலு(ம்) (நிஆ) 
 உயர்ந்/ததே (நிஆ) உறைந்/து (நேஆ)
தள்/ளுவ(து) (நிஆ) அனைத்/தும் (நேஆ) 
 தள்/ளி (நேஆ) வாழ்ந்/தால் (இவெ)
வள/மாய் (நேஆ) மண்/ணில் (நேஆ) 
 வாழ்க்/கை (இவெ) நடக்/குமே.

வெண்பா முயற்சி
(இன்னிசை வெண்பா)

வெண்பா இயற்றுதற்கு வெண்டளை யாம்தளையே;
வெண்டளையால் தானே விளைந்திடும் செப்பலோசை;
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேருமென்
ஆமெனில் வெண்டளை யாம். ... 4

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமென வே. ... 5

(சிந்தியல் வெண்பா)
அடிகள் இரண்டில் குறள்வெண்பா மற்றும்
அடிகளில் நாலாம் அளவியல் வெண்பா
வடித்துத்தான் பார்ப்போமே நாம். ... 6

குறள் வெண்பா முயற்சி
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ ஐயா! ... 7

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் தேமா

ஏற்ற வகைகளில் வெண்டளை வந்தாலும்
ஈற்றசையின் வாய்பாடு தப்பு. ... 8

திருத்தியது
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ சொல். ... 9

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்

இன்னும் இயல்பாக
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ சொல்லு? ... 10

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் காசு

எல்/லோ/ரும் (வெவெ) நல்/லவர் (இவெ) 
 என்/றா/கிப் (வெவெ) போ/னா/லே (வெவெ) 
தொல்/லுல/கம் (வெவெ) தாங்/குமோ (இவெ) சொல்/லு.

இன்னிசை வெண்பா 
(அலகிட்டுத் தளைகளை அறிக)

நல்லவரும் அல்லவரும் வல்லவரும் மெல்லியரும்
கல்லுடன் மண்போலப் பல்வகையில் சேர்ந்துவந்(து)
அல்லும் பகலுமாய் அல்லலுறும் நாடகமே
தொல்லுலக வாழ்வென்று சொல்லு. ... 11

நேரிசை வெண்பா 
(இப்படி எழுதுவது இன்னும் சிறப்பு)

நல்லவரும் அல்லவரும் வல்லவரும் மெல்லியரும்
கல்லுடன் மண்போலச் சேர்ந்துவந்து - பல்வகையில் 
அல்லும் பகலுமாய் அல்லலுறும் நாடகமே
தொல்லுலக வாழ்வென்று சொல்லு. ... 12

கலிப்பா முயற்சி
(குறள் வெண்செந்துறை)

கலித்தளையே பெரிதுவரப் பிறதளைகள் விரவிவந்தால்
கலிப்பாவின் அடிகளாகித் துள்ளலோசை பயின்றுவரும். ... 13

(தரவு கொச்சகக் கலிப்பா)
நீலவானப் பெருவெளியில் நிறவகைகள் கோலமிடும் 
மாலையிலே தொடுத்திட்ட மலர்கள்போல் பலநிறங்கள்
காலையிலே எழுந்ததுமே கண்ணிறைக்கும் சிவந்தவானில்
ஆலயத்தின் மணியோசை ஆர்த்துந்து அமைதிதரும். ... 14

கூவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளஙாய் புளிமாங்காய் தேமாங்காய் கருவிளங்காய்

நீ/லவா/னப் (கத) பெரு/வெளி/யில் (கத) 
 நிற/வகை/கள் (வெவெ) கோ/லமி/டும் (வெவெ) 
மா/லையி/லே (கத) தொடுத்/திட்/ட (கத) 
 மலர்/கள்/போல் (கத) பல/நிறங்/கள் (வெவெ)
கா/லையி/லே (கத) எழுந்/தது/மே (வெவெ) 
 கண்/ணிறைக்/கும் (கத) சிவந்/தவா/னில் (வெவெ) 
ஆ/லயத்/தின் (கத) மணி/யோ/சை (வெவெ) 
 ஆர்த்/துவந்/து (கத) அமை/தித/ரும்.

*****

7.09. அளவடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.09. அளவடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நாற்சீர் அமைந்தே முடிவது அளவடி
நாற்சீர் அடியின் இயல்பென் றாவதால்
அளவடி யென்றே அழைக்கப் பட்டது
நேரடி என்றும் இதனை அழைப்பரே. ... 1

பழந்தமிழ் இலக்கியப் பனுவல் பலவும்
அளவடி கொண்டே அமைந்து வருவன.
அகவல் வெண்பா கலிப்பா என்னும்
மூவகைப் பாக்களில் அளவடி வருமே. ... 2
[அகவற்பா=ஆசிரியப்பா]

(ஆசிரியத் தாழிசை)
அளவடிச் சான்றுகள் எளிதில் காணலாம்.
அளவடி அமைத்தால் அழகுறும் கவிதை.
அளவடி யோசை செவியில் ஆர்க்குமே. ... 3

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
--ஔவையார், கொன்றை வேந்தன்.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோ(டு) இணங்க வேண்டாம்.
--உலகநாதர், உலகநீதி

ஆசிரியப்பா சான்றுகள்
(நேரிசை ஆசிரியப்பா)

பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.
--கபிலர், புறநானூறு 107

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
---கபிலர், குறுந்தொகை 18

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
யரும்பெறற் பாவா யாருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே யென்கோ
வலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ
யாழிடைப் பிறவா விசையே யென்கோ
--சிலப்பதிகாரம், 1.2.73-79

தானமும் தருமமும் தவமும் தன்மைசேர் 
ஞானமும் நல்லவர்ப் பேணும் நன்மையும் 
மானவ வையம் நின்மகற்கு வைகலும்
ஈனமில் செல்வம் வந்தியைக என்னே
--கம்பராமாயணம் 2.1.80

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
--மகாகவி பாரதியார்

வெண்பாச் சான்றுகள் (ஈற்றடி சிந்தடி)
(குறள் வெண்பா)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
--திருக்குறள் 1

(நேரிசை வெண்பா)
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவ ருளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12

(இன்னிசை வெண்பா)
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்
--நாலடியார் 36

கலிப்பா சான்றுகள்
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
--மாணிக்கவாசகர், திருவாசகம் 19

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாம லினிப்பதுவே.
--இராமலிங்க அடிகள், ஆளுடைய அடிகள் அருள்மாலை 7

*****

7.07. சிந்தடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.07. சிந்தடி முயற்சி: கட்டளைச் சிந்தடி
(இணைக்குறள் ஆசிரியப்பா)

நாமும் சிந்தடி முயன்றிடு வோமா?
ஏழுமுதல் ஒன்பதுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் சிந்தடி புனைவோம் முதலிலே. ... 1

காலம் ஞாலம் பாலம் கோலம்
என்னும் சொல்வகை அடியெது கைவர
மாறுதல் அமைத்தல் வரைதல் நீங்குதல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
பாலங்கள் அமைத்துப்
பாவங்கள் நீக்கி
ஞாலம் நலம்பெறும் ஞானம் அறிவோமே. ... 2

ஏழு எழுத்துக் குறளடி (2 + 3 + 2): (வஞ்சி விருத்தம்)
காலம் மாறிடும் உண்மை
ஞாலம் மாறுதல் உண்டோ?
பாலம் அமைக்கும் உள்ளம்
கோலம் வரைந்து பார்க்கும். ... 3

எட்டு எழுத்துக் குறளடி (3 + 3 + 2): (வஞ்சி விருத்தம்)
காலங்கள் மாறினால் இந்த
ஞாலமும் மாறுதல் உண்டோ?
பாலங்கள் அமைத்தல் நன்றே
கோலங்கள் மாறலாம் அன்றோ? ... 4

ஒன்பது எழுத்துக் குறளடி (3 + 3 + 3): (வஞ்சி விருத்தம்)
காலங்கள் மாறினால் கடல்சூழ்
ஞாலமும் மாறுதல் ஆகுமோ?
பாலங்கள் அமைத்தல் நன்றெனில்
கோலங்கள் மாறலாம் அல்லவோ? ... 5

7.08. சிந்தடி முயற்சி: சீர்வகைச் சிந்தடி
(வஞ்சி விருத்தம்)

பழமொழிகள் இணைத்து:
நல்குர வில்லா நாக்கினை
வல்லிதின் அடக்க விழைவோம்
சொல்லது தேயாது கல்தேயினும்
நல்லதே உரைக்கப் பழகுவோம். ... 1

வஞ்சி விருத்தக் குறட்பாக்கள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்
பசும்புல் தலைகாண்பு அரிது.
தானம் தவமிரண்டும் தங்கா 
வானம் வழங்கா தெனின். ... 2

நாளெல்லாம் நடையாய் நடந்ததில்
தாளெல்லாம் ஆயின திண்ணென;
கோளெல்லாம் கூடும் அற்புத
நாளென்றால் விற்பனை யாகுமோ! ... 3

வேளாண்மைக் குறைவால் பயிர்கள்
தாளாகிப் போகத் தாளாத
வேளாளன் தற்கொலை துணிய
வாளா விருந்தது அரசு. ... 4

*****

7.06. சிந்தடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.06. சிந்தடிி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இருதளை யடுத்தே இயலும் சிந்தடி
சீர்வகை யாயின் முச்சீர் அமையும்
எழுத்தடி யாயின் ஏழெட் டொன்பதே. ... 1

வஞ்சிப் பாவிற் குரித்தென் றமையினும்
வெண்பா ஈற்றடி சிந்தடி யாய்வரும்
நேரிசை யகவலின் ஈற்றய லடியிலும்
இணைக்குற ளகவலின் இடையிலும் வருமே. ... 2

(நிலைமண்டில ஆசிரியப்பா 
 தனிச்சொல்லுடன்)
தொல்காப் பியம்தரும் அடிகளின் பெயர்கள்
எழுத்துகள் கொண்டும் இயல்வன வாயினும்
சங்க காலம் தொட்டே பாக்கள்
சீர்வகை அடிகளில் யாக்கப் பட்டன
இதனால்
சீர்களை எண்ணியே அடிகளின் பெயர்களைக் 
காரிகை போன்ற நூல்களும் குறித்தன
எழுத்துகள் எண்ணும் கட்டளை அடிகள்
வழக்கில் வந்தன பிற்கா லத்தே. ... 3

கட்டளைச் சிந்தடிச் சான்று
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிகள் தோறும் எழுத்துகள் ஒன்பதில்
முடிவுறும் சிந்தடிச் சான்று கீழே.
இவ்வகை அடிகள் வருவன அரிதே. ... 4

இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய்
---தோலாமொழித் தேவர், சூளாமணி, 736

சீர்வகைச் சிந்தடிச் சான்று
வாளா வார்கழல் வீக்கிய
தாளார் தாமுடைந் தோடினார்
நாளை நாணுடை மங்கைமார்
தோளை நாணிலர் தோயவே.
---தோலாமொழித் தேவர், சூளாமணி, 1355

நீறணி மேனியன் நீள்மதியோ 
டாறணி சடையினன் அணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரம்
சேறணி வளவயற் சிரபுரமே
---சம்பந்தர் தேவாரம், 1177

பூவார் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி.
---இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், 
புகார்க் காண்டம், கானல் வரி, 26

வள்ளி யப்பா பாப்பாப் பாட்டில்
அள்ளும் எளிய சொற்கள் வேய்ந்த
சிந்தடி சீராய்ச் சிரிப்பது காண்பீர். ... 5

பத்துக் காசு விலையிலே
பலூன் ஒண்ணு வாங்கினேன்
பையப் பைய ஊதினேன்
பந்து போல ஆனது
பலமாய் நானும் ஊதினேன்
பானை போல ஆனது
பானை போல ஆனதை
பார்க்க ஓடி வாருங்கள்
விரைவில் வந்தாள் பார்க்கலாம்--அல்லது
வெடிக்கும் சத்தம் கேட்கலாம்!
---குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

வெண்பா ஈற்றடிச் சான்றுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வெண்ணிறப் பாவிலும் வண்ணம் இறைக்கும்
வெண்பா ஈற்றடி பலவகை ரசங்களில்
கண்ணையும் கருத்தையும் கவரும் சான்றுகள்
திண்ணைப் பேச்செனப் பகிர்ந்து கொள்வோமே. ... 6

திருக்குறள்
என்புதோல் போர்த்த உடம்பு.
இம்மையும் இன்பம் தரும்.
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
ஞாலத்தின் மாணப் பெரிது.
அன்றே மறப்பது நன்று. 5
எச்சத்தாற் காணப் படும்.
பிறவும் தமபோல் செயின்.
ஆரிருள் உயித்து விடும்.
மலையிணும் மாணப் பெரிது.
நாவினாற் சுட்ட வடு. 10
என்றும் இடும்பை தரும்.
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.
அழுக்காறு இல்லாத இயல்பு.
தீவினை என்னும் செருக்கு.
தீயினும் அஞ்சப் படும். 15
ஊதியம் இல்லை உயிர்க்கு.
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
எல்லா உயிருந் தொழும்.
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
மூக்கிற் கரியார் உடைத்து. 20

ஔவையார்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
நீர்மேல் எழுத்துக்கு நேர்.
குலத்தளவே ஆகுமாம் குணம்.
எல்லார்க்கும் பெய்யும் மழை.
தீதொழிய நன்மை செயல். 5
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
பாவிகாள் அந்தப் பணம்.
எனையாளும் ஈசன் செயல்.
கல்லாதான் கற்ற கவி.
முற்பவத்தில் செய்த வினை. 10

ஈற்றடிப் பழமொழிகள்: முன்றுறை அரையனார்
கற்றலிற் கேட்டலே நன்று.
பாம்பறியும் பாம்பின் கால்.
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.
அணியெல்லாம் ஆடையின் பின்.
திருவினும் திட்பம் பெறும். 5
கல்தேயும் தேயாது சொல்.
நாவிற்கு நல்குரவு இல்.
குன்றின்மேல் இட்ட விளக்கு.
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.
தங்களை நாய்குரைத் தற்று. 10
நுணலும்தன் வாயால் கெடும்.
இருதலைக் கொள்ளியென் பார்.
மகனறிவு தந்தை அறிவு.
தமக்கு மருதுவர் தாம்.
தட்டாமல் செல்லாது உளி. 15
கண்டதூஉம் எண்ணிச் சொல்.
புலித்தலையை நாய்மோத்தல் இல்.
முறைமைக்கு மூப்பிளமை இல்.
ஆயிரம் காக்கைக்கோர் கல்.
அஞ்சுவார்க் கில்லை அரண். 20
தனிமரம் காடாதல் இல்.
வித்தின்றிச் சம்பிரதம் இல்.
ஒன்றுக் குதவாத ஒன்று.
தாய்மிதித்(து) ஆகா முடம்.
இறைத்தோறும் ஊறும் கிணறு. 25

தனிப்பாடல் ஈற்றடிகள்
ஔவையார்
கொடையும் பிறவிக் குணம்.
கீச்சுக்கீச் சென்னுங் கிளி.
கூறாமல் சந்நியாசங் கொள்.
எறும்புந்தன் கையாலெண் சாண்.
புலவர்க்கும் வெண்பா புலி.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.

திருவள்ளுவ நாயனார்
வருவது தானே வரும்.
குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து.
அப்பாலும் பாழென் றரி.

காளமேகப் புலவர்
பாம்பாகும் வாழைப் பழம்.
ஆடுபரி காவிரியா மே.
துப்பாக்கி யோலைச் சுருள்.
பூசணிக்காய் ஈசனெனப் போற்று.
குடத்திலே கங்கையடங் கும். 5
போட்டாளே வேலயற்றுப் போய்.
அன்னமிறங் காமலலை வாள்.
எலியிழுத்துப் போகிற தென்.
கண்டதுண்டு கேட்டதில்லை காண்.
குதிரை விற்றவனைக் கொண்டு. 10

*****

Saturday, December 3, 2016

7.04. குறளடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.04. குறளடி முயற்சி: கட்டளைக் குறளடி
(இணைக்குறள் ஆசிரியப்பா)

நாமும் குறளடி முயன்றிடு வோமா?
நான்குமுதல் ஏழுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் குறளடி புனைவோம் முதலிலே. ... 1.

கந்தன் சிந்தை வந்து விந்தை
என்னும் சொல்வகை அடியெது கைவர
நாமம் நம்முளம் ஏற்றுதல் செய்தல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
கந்தனை எண்ணி
வந்தனை செய்து 
விந்தைகள் புரிய வேண்டிடு வோமே. ... 2.

நான்கு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தன் நாமம்
சிந்தை ஏற்றில்
வந்தே நம்முள்
விந்தை செய்வான். ... 3.
[சீர்கள்: எல்லாம் தேமா; தளைகள்:
எல்லாம் நேரொன்றாசிரியம்; ஓசை: ஏந்திசை யகவல்]

ஐந்து எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமம்
சிந்தையில் ஏற்ற
வந்தே நம்முளம்
விந்தைசெய் வானே! ... 4.
[சீர்கள்: கூவிளம் தேமா; தளைகள்: இயற்சீர் வெண்டளை 
நேரொன்றாசிரியம்; ஓசை: ஒழுகிசை யகவல்]

ஆறு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமமே
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் மனத்தில்
விந்தைகள் செய்வானே! ... 5.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, 
ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]

கந்தனின் நாமத்தைச்
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் உள்ளத்தில்
விந்தைகள் செய்வானே! ... 6.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: எல்லாம் 
வெண்டளை; ஓசை: ஒழுகிசைச் செப்பல்]

ஏழு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் திருநாமம்
சிந்தையில் ஏற்றினாலே
வந்துநம் மனத்திலே
விந்தைகள் செய்திடுவான். ... 7.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, 
ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]

7.05. குறளடி முயற்சி: சீர்வகைக் குறளடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

கட்டளைக் குறளடி முயன்ற பின்னர்
சீர்வகைக் குறளடி முயலுதல் எளிது
சீர்கள் இரண்டில் தளையொலி தகைக்கவே. ... 1.

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்ய ... 2.

வஞ்சிப் பாவில் தனிச்சொல் முன்வரும்
கொஞ்சப் பகுதியிது; மீதம் உள்ளதைத்
தக்க தனிச்சொல் சுரிதகம் இவற்றின்
பக்க பலம்சேர்த்துக் கீழே காண்போம். ... 3.

விண்ணதிர்ந்திட மண்ணதிர்ந்திட
பண்ணிசைத்திடும் யானைமந்தை
உண்ணவரும் சேனையையெனக்
கண்ணெதிரினில் காட்சிதந்தால்
விண்ணவரும் வெருண்டிடாரோ? ... 4.

இதுவும் வஞ்சிப் பாவின் பகுதி
இனிவரும் தனிச்சொல் சுரிதகம் கொண்டு
இதனின் எதிர்மறை கீழே முடிப்போம். ... 5.

*****

(குறளடி வஞ்சிப்பா)
பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்யக்
கரையேறினால்
தலையில் காக்கை எச்சம் இட்டிட
நிலைதடு மாறி நின்றார் துறவி! ... 1

விண்ணதிர்ந்திட மண்ணதிர்ந்திட
பண்ணிசைத்திடும் யானைமந்தை
உண்ணவரும் சேனையையெனக்
கண்ணெதிரினில் காட்சிதந்தால்
விண்ணவரும் வெருண்டிடாரோ?
ஆனால்
குழந்தை கொஞ்சமும் அஞ்சிட வில்லை
குழந்தை பார்த்தது காணொளி யன்றோ? ... 2

*****

7.03. குறளடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.03. குறளடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒருதளை யடுத்திரு சீரில் முடிவது
குறளடி யென்னும் குறுவடி யாமே.
அடிவகை அனைத்திலும் குறுமை யுடையதாய்க்
கடிதின் ஒலிக்கக் குறளடி யெனவே. ... 1.

வஞ்சிப் பாவினுக் குறியது குறளடி
வஞ்சியடி யல்லாது வரும்குற ளடிக்கு
நான்குமுதல் ஆறுவரை எழுத்தெனச் சொல்லுவர்
தொல்காப் பியர்தம் செய்யுள் இயலிலே.  ... 2.
[தொல்.சூத்.35]

கட்டளைக் குறளடிச் சான்று
கட்டளைக் குறளடிச் சான்றெனப் பார்க்க
ஒவ்வொரு அடியிலும் ஐந்தெழுத் துவரும்
வஞ்சித் துறையடி கீழே வருமே. ... 3.

பேரறி வன்னான்
சார விருந்த
வூரினு மில்லென்
றார விகழ்ந்தே
---தொன்னூல் விளக்கம், 242

இவ்விதம் இன்னொரு சான்று பகர
ஒவ்வொரு அடியிலும் ஆறெழுத் துவரும்
செவ்விய குறளடி சூளா மணிதரும். ... 4.

நிரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைக்கொண் மாலையாய்
---சூளாமணி 738

குறளடிப் பொருளை ஆறெழுத் துவரும்
குறளடி களிலே கீழுள வாறு
குறையா தெழுத நிறைவாய் விளங்குமே. ... 5.

கரிய கவசம்
கருமை வண்டுகள்
நிரைந்து மொய்த்திடும்
நறுமை மாலையாய் ... [நறுமை=வாசனை]

மேல்வரும் சான்றுகள் சீர்வகை நோக்கிலும்
ஏலுதல் காண்க சீர்கள் இரண்டில் 
இருவகை நோக்கிலும் குறளடி யெனவே. ... 6.
[ஏலுதல்=பொருந்துதல்]

சீர்வகைக் குறளடிச் சான்று
எழுத்துகள் மிகினும் சீர்கள் இரண்டால்
குறளடி யெனவரும் புகழ்மிகு சான்று
தருவது யா.க. விருத்தி கீழே. ... 7.

சுறமறிவன துறையெல்லாம்
இறவின்பன வில்லெல்லாம்
மீன்றிரிவின கிடங்கெல்லாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம்
---யாப்பருங்கல விருத்தி, பக்.64

இவ்வடிகள் பொருள்நோக்கின்:
சுறாமீன் ஆறெல்லாம்
இறால்மீன் இல்நிறையும்
மீன்திரியும் அகழிகளில்
தேன்மலர்கள் சோலையிலே.

*****

Thursday, December 1, 2016

7.02. அடி வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.02. அடி வகைகள்
[வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிகளின் அமைப்பை நிர்ணயம் செய்யும் 
மரபுகள் இரண்டு வழிகள் இரண்டு:
சீர்கள் எண்ணுதல் எழுத்துகள் எண்ணுதல்
சீர்கள் எண்ணுதல் சீர்வகை அடியிலே
எழுத்துகள் எண்ணுதல் கட்டளை அடியிலே
வழக்கினில் பெரிதும் சீர்வகை அடிகளே. ... 1

கட்டளை அடிகள்
கட்டளைக் கலித்துறை கலிப்பா வினமாம்
கட்டளைக் கலித்துறை அடியொன் றினிலே
நேரில் தொடங்கின் பதினா றெழுத்தாம்
நிரையில் தொடங்கின் பதினே ழெழுத்தே. ... 2

எண்ணப் படுகிற எழுத்துகள் வகையில்
ஒருமாத் திரையொலி உயிர்மெய் உயிருமே.
ஒற்றெழுத் துகளும் ஆய்த வெழுத்தும்
குற்றிய லுகரமும் எண்ணப் படாதெனின்
முற்றிய லுகரம் எண்ணப் பட்டுக்
கட்டளை அடியின் அளவினைச் சொல்லுமே. ... 3
--[தொல்.சூத்.8.42]

தொல்காப் பியம்தரும் கட்டளை அடிகளில்
ஒல்கும் எழுத்துகள் ஓர்க்கும் போது
குறளடி குறைந்தது நான்கெழுத் துகளில்
குறளடி உச்சம் ஆறெழுத் துகளாம்
சிந்தடி குறைந்தது ஏழெழுத் துகளாம்
சிந்தடி உச்சம் ஒன்பதாம் எழுத்துகள்
அளவடி குறைந்தது பத்தெழுத் துகளாம்
அளவடி உச்சம் பதினான் கெழுத்துகள்
நெடிலடி குறைந்தது பதினைந் தெழுத்துகள்
நெடிலடி உச்சம் பதினே ழெழுத்துகள்
கழிநெடில் பதினெட் டுமுதல் இருபதே. ... 4

எழுத்தில் இயங்கும் கட்டளை அடிக்கு
வி.எஸ். ராஜம் புத்தகம்* தருகிற ... [பக்.142]
உரைகளில் வருகிற சான்றுகள் கீழே. ... 5

’பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து’
பே-பே சா-சா என்னும் நான்கு
குற்றிய லிகரம் கணக்கில் வராத
எழுத்துகள் வருவதால் குறளடி யாமே. ... 6

’நீர்வாய்க் கொண்ட நீல மூர்வாய்’
நீ-வா கொ-ட நீ-ல மூ-வா
எட்டெழுத் துவரும் சிந்தடி யாமே. ... 7

’நன்மணங் கமழும் பன்னல் லூர’
ந-ம-ண க-ம-ழு ப-ன-லூ-ர என்னும்
பத்தெழுத் துவரும் நேரடி யாமே. ... [நேரடி=அளவடி] ... 8

’அணிநகை நசை‍இய அரியமர் சிலம்பின்’
அ-ணி-ந-கை ந-சை-இ-ய அ-ரி-ய-ம சி-ல-பி
பதினைந் எழுத்தில் நெடிலடி யாமே. ... 9

’நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர்’
ந-ளி-மு-ழ-வு மு-ழ-கி-ய அ-ணி-நி-ல-வு ம-ணி-ந-க
பதினெட் டெழுத்தில் கழிநெடி லடியாம். ... 10

[*Ref: 'A Reference Grammar of Classical Tamil Poetry' by V.S.Rajam]

சீர்வகை அடிகள்
சீர்வகை அடிகள் மொத்தம் ஐந்து.
குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடில் எனவரும் வகைகள் ஐந்தே. ... 11

சீர்கள் இரண்டில் முடிவது குறளடி
சீர்கள் மூன்றில் முடிவது  சிந்தடி
சீர்கள் நான்கில் முடிவது  அளவடி
சீர்கள் ஐந்தில் முடிவது  நெடிலடி
சீர்கள் ஆறும் மேலும் கழிநெடில்
சீர்கள் நான்கில் முடியும்  அளவடி
அடியின் இயற்கை அளவெனச் சொல்வரே. ... 12

அடிகளின் பெயரெலாம் காரணப் பெயர்களே
வடிவினில் தீரக் குள்ளனாம் ’குறளன்’
அவனின் நெடியான் ’சிந்தன்’ நெடியான்
அவனினும் ’அளவிற் பட்டான்’ தீர
நெடியான் ’கழிய நெடியான்’ என்றே
வடிவம் சுட்டிய பெயர்கள் வழக்கிலே
முன்னொரு காலம் மன்னிய தாலே
வடிவம் சுட்டி அடிப்பெயர் இட்டனர். ... 13

’நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே’ ... [தொல்.சூத்.31]
தளையும் தொடையும் நேரடி குறித்தே ... [நேரடி=அளவடி]
’அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே’ ... [தொல்.சூத்.34]

அளவடி தொட்டே பிறவகை அடிகள் 
அளவுகள் குறித்துப் பெயர்கள் பெறுவன.
அளவடி தொட்டே தொடைகளின் பெயர்களும். 
தளைகள் குறிக்கவும் பொதுவில் அளவடி.
அளவடி இயல்வன மூவகைப் பாக்கள்
அகவல் வெண்பா கலிப்பா எனவே.
குறளடி சிந்தடி வஞ்சியில் வருமே. ... 14

சீர்வகை அடிகள் நோக்கும் போது
சீர்களே கணக்கு வரிகள் அல்ல.
கழிநெடி லடிகள் பொதுவில் வரிகள்
ஒன்றின் மிக்காய் எழுதப் படுமே. ... 15

*****

7.00. அடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.00. அடி
[வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியெனும் சொல்லின் அர்த்தமென் றாகும்
அடிக்கால் பாதம் ஆதி என்பன
அடியெனும் உறுப்பில் ஆகி வருமே. ... 1

[அடிக்கால்=காலின் அடிப்பாகம்]

செய்யுள் எழுதல் சீர்களில் என்றால்
செய்யுள் பேசுதல் ஓசையில் என்றால்
செய்யுள் உருத்தல் பாவினில் என்றால்
செய்யுள் புரிதல் பொருளினில் என்றால்
செய்யுள் நடத்தல் அடிகளில் எனலாம்
செய்யுள் அடிகளில் பாவகை தெரியுமே. ... 2

சீர்களும் தளைகளும் பாவகைப் பெயர்பெற
சீர்களும் தளைகளும் அடிகளில் தொடர
செய்யுளின் ஆதி வடிவே அடியென. ... 3

[பாவகை = அகவல், வெண்பா, கலி, வஞ்சிப் பாக்கள்]

7.01. அடியென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இரண்டு முதலிய சீர்களைக் கொண்டு
முடிவது அடியென இலக்கணம் கூறும்
இதையே ஒன்று முதலிய தளைகள்
அடுத்து முடிவது அடியெனச் சொல்வரே. ... 1

முடிவது என்பது பொருள்குறித் தல்ல
முடிவது அடியில் சீர்தளைத் தொடுப்பே
முடிவது அடியெனில் தளையும் ஓசையும்
வடிவுறும் பொருளும் அடிகளில் தொடருமே. ... 2

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

சீர்-தளை அடிகளில் எண்ணிப் பார்த்தால்
சீர்களின் எண்ணில் ஒன்று குறைவெனத்
சீரிடைத் தளைகள் மொத்தம் வருமே.
எனினும்
சீர்களின் இடையிலும் அடிகளின் இடையிலும்
பாக்களில் தளைகள் பெரிதும் வருவதால்
ஈற்றுச் சீரின் தளையும் சேர்த்திட
சீர்-தளை எண்ணே அடியினிற் சமமே.
இங்ஙனம்
பாவின் மொத்தச் சீர்களின் கணக்கில்
பாவின் மொத்தத் தளைகளின் கணக்கே
ஒன்று குறைவெனக் கண்டு கொள்க. ... 3

(குறள் வெண்பா)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

(நேரிசை ஆசிரியப்பா)
மேல்வரும் குறட்பாச் சீர்களை எண்ணிட
1அகர 2முதல 3எழுத்தெல்லாம் 4ஆதி
5பகவன் 6முதற்றே 7உலகு.
மொத்தம் ஏழு வருவது காண்க. ... 4

மேல்வரும் குறட்பாத் தளைகளை எண்ணிட
அகர1 முதல2 எழுத்தெல்லாம்3 ஆதி
4பகவன் 5முதற்றே 6உலகு.
மொத்தம் ஆறே வருவது காண்க. ... 5

*****