Sunday, November 27, 2016

6.06. எழுதளை நிரல்களின் வாய்பாடுகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

6.06. எழுதளை நிரல்களின் வாய்பாடுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுதளை நிரல்களின் வாய்பா டுகளைச்
சுழல்வரச் சுருக்கமாய்க் குறிப்பிடு வோமே
எழுந்திடும் எடுத்துக் காட்டுகள் தந்தே
ஆசிரி யத்தளை அகவற் றளையெனப்
பேசப் படுவதும் நினைவிற் கொள்க. ... 1

நேரொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரொன் றகவற் றளையே தொடரத்
தேமா தேமா தேமா தேமா 
என்னும் சீர்களின் சுழலொன் றெனவே. ... 2

நேரொன்றாசிரியத் தளை: தேமா நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணும் மண்ணும் பண்ணும் விந்தை
எண்ணில் வாராக் கோடி கோடி ... 3

நிரையொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நிரையொன் றகவற் றளையே தொடரக்
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
என்னும் சீர்களின் சுழலொன் றெனவே. ... 4

நிரையொன்றாசிரியத் தளை: கருவிளம் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பிலும் நிலத்திலும் நிகழ்ந்திடும் வியப்புகள்
விசித்தலில் அடங்கிடாக் கணக்கினில் விரியுமே. ... 5
[விசி=கட்டு]

இயற்சீர் வெண்டளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இயற்சீர் வெண்டளை இசைந்தே தொடரக்
கீழ்வரும் நிரல்கள் தனிதனிச் சுற்றில்
பயிலும் வகையில் அடிகளில் உறுத்தலாம்:
புளிமா புளிமா புளிமா புளிமா 
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்.
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 6

இயற்சீர் வெண்டளை: புளிமா நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பும் நிலமும் நிகழ்த்தும் வியப்பு
விசியில் அடங்காக் கணக்கில் விரியும். ... 7

இயற்சீர் வெண்டளை: கூவிளம் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணிலும் மண்ணிலும் நேர்ந்திடும் விந்தைகள்
எண்ணிலே வந்திடாக் கோடிகள் ஆகுமே. ... 8

இயற்சீர் வெண்டளை: தேமா புளிமா கருவிளம் கூவிளம் 
 (குறள் வெண்செந்துறை)
விண்ணும் நிலமும் நிகழ்த்திடும் விந்தைகள்
எண்ணில் அடங்காக் கணக்கினில் ஆகுமே. ... 9

வெண்சீர் வெண்டளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வெண்சீர் வெண்டளை விளங்கித் தொடரக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 10

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணோக்கின் மண்ணோக்கின் காண்கின்ற ஆச்சர்யம்
எண்ணேதும் கொள்ளாத எண்ணிக்கை யாயாமே. ... 11

வெண்சீர் வெண்டளை: கூவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்வெளியில் மண்ணிலத்தில் காணுகின்ற விந்தைபல
எண்களிலே வந்திடாத கோடிவகை யாகிடுமே. ... 12

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய் கூவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்மீதும் பூமியிலும் காண்கின்ற விந்தைகளே
எண்ணேதும் சுட்டிடாத எண்ணிக்கை யாகிடுமே. ... 13

கலித்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

கலித்தளை துள்ளிக் கலித்தே வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் 
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் 
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் 
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 14

கலித்தளை: புளிமாங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்கண் நிலத்தின்கண் நிகழ்கின்ற வியப்பேபார்
விசியேதும் அடக்காத கணக்கொன்றின் விரிவாமே. ... 15

கலித்தளை: கருவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பினிலே நிலத்தினிலே நிகழ்ந்துவரும் வியப்புகளாம்
விசித்தலிலே அடங்கிடாத கணக்கினிலே விரிவதாமே. ... 16

கலித்தளை: புளிமாங்காய் கருவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்கண் நிலத்தினிலே நிகழ்கின்ற வியப்புகளாம்
விசியேதும் அடக்கிடாத கணக்கொன்றில் விரிவதாமே. ... 17

ஒன்றிய வஞ்சித்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றிய வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி 
கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி 
புளிமாங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி 
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 18

ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்வெளி நிலத்தின்வெளி நிகழ்ந்தேவரும் வியப்பானது
விசியேதிலும் அடங்காவரும் கணக்கொன்றதன் விரிவாகுமே. ... 19

ஒன்றிய வஞ்சித்தளை: கருவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்புமீதிலும் நிலவெளியிலும் தினம்நிகழ்கிற வியப்புகள்பல
விசியெதுவிலும் அடங்கிடாவரும் கணக்குதனிலே விரிந்துநிற்குமே. ... 20

ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி கருவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்வெளி நிலவெளியிலும் நிகழ்ந்தேவரும் வியப்புகள்பல
விசியேதிலும் அடங்கிடாவரும் கணக்கொன்றினில் விரிந்துநிற்குமே. ... 21

ஒன்றாத வஞ்சித்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றாத வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி 
கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி 
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி 
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 22

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணின்வழி மண்ணின்வழி நேர்ந்தேவரும் ஆச்சர்யமே
எண்ணேதுமே கட்டாதுள எண்ணிக்கையில் நின்றேவரும். ... 23

ஒன்றாத வஞ்சித்தளை: கூவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்வழியினில் மண்வழியினில் நேர்ந்திடுகிற ஆச்சரியமே
எண்வழியினில் கட்டவியலா எண்ணதுவினில் நின்றுவருமே. ... 24

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி கூவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணின்வழி மண்வழியினில் நேர்ந்தேவரும் ஆச்சரியமே
எண்ணேதுமே கட்டவியலா எண்ணிக்கையில் நின்றுவருமே. ... 25

(நிலைமண்டில ஆசிரியப்பா)
விண்ணும் மண்ணும் நிகழ்த்தும் விந்தையைப்
எண்ணில் ஏழாம் தளைகளில் படித்தே
ஒவ்வொரு வகையிலும் ஒலிவே றாதலை
செவ்விதின் உணர்க விரிவாய்ப் பின்னே. ... 26

*** *** ***

No comments:

Post a Comment