Friday, November 25, 2016

6.00. தளை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

6.00. தளை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தளைதல் என்றால் தகைத்தல் பிணித்தல்
தளைத்தல் எனினும் கட்டுதல் ஆகும்
தளையெனும் சொல்லில் விளையும் பொருள்கள்
கட்டு விலங்கு கயிறு சிலம்பென
ஒட்டிப் பிணைத்தே இசைந்திட வைக்குமே. ... 1

பூக்களை நாரினால் கட்டித் தளைக்கப்
பூச்சரம் ஒன்றுரு வாவது போலே
சீர்களை இசைவரச் செய்யுளில் தளைக்க
சீர்களின் தொடரென அடியுரு வாகுமே. ... 2

6.01. தளையென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீரொடு சீர்சேர்த் தியற்றும் அடிகளில்
சீரிடை நின்றே சீர்களைப் பிணித்திடும்
செய்யுளின் உறுப்பே தளையெனப் படுமே.
சீர்களைத் தளைக்கும் தளையெனும் உறுப்பே
செய்யுளின் ஓசையைச் செவியுறச் செய்யுமே. ... 1

செய்யுளில் தளையால் எழுந்திடும் ஓசைகள்
செய்யுள் இயலில் தனித்தோர் இயலாய்
விரிவாய்ப் பின்னர் விளங்கிக் கொள்வமே. ... 2

சீர்கள் இரண்டு சேரும் போது
முதலில் நிற்பது நின்றசீர் ஆகும்
எதிரில் வருவது வரும்சீர் ஆகுமே. ... 3

இடம்வலம் எழுதும் இன்றமிழ்ச் செய்யுளில்
இடப்புறம் நிற்பது நின்றசீர் ஆகும்
வலப்புறம் வருவது வரும்சீர் ஆகுமே. ... 4

’பிறவிப் பெருங்கடல்’ எனும்சீர்த் தொடரில்
’பிறவிப்’ பென்பது இடப்புறம் நின்றசீர்
’பெருங்கடல்’ என்பது வலப்புறம் வரும்சீர். ... 5

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

சீர்க ளிரண்டு தளைப்பது காண
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றுதல் ஒன்றாமை நோக்கப் படுமே.
எனவே
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றியோ ஒன்றாதோ கூடி நிற்பது
தளையெனும் உறுப்பின் இலக்கண மாகுமே. ... 6

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைகள் பெரிதும் சீரிடை வரினும்
தளைகள் அடிகளுக் கிடையிலும் வருவன
அடியிடைத் தளைகள் வருவது காண
நின்ற அடியின் ஈற்றுச்சீர் ஈற்றசையும்
வருகிற அடியின் முதற்சீர் முதலசையும்
ஒன்றுதல் ஒன்றாமை நோக்கப் படுமே. ... 7

6.02. தளை வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேர்முன் நேரும் நிரைமுன் நிரையும்
வருவது ஒன்றிய தளையெனப் படுமே
நேர்முன் நிரையும் நிரைமுன் நேரும்
மாறி வருவது ஒன்றாத் தளையாம். ... 1

தன்சீர் தனதொடு ஒன்றலும் உறழ்தலும்
என்றிரண் டாகும் இயம்பின தளையே.
---இலக்கண விளக்கம், 717

நேர்முன் நேர்வர ஒன்றுதல்
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

ஒன்றும் ஒன்றாத் தளைகள் குறிப்பில்
நின்ற சீரே சீர்ப்பெயர் தாங்கும்
எதிர்வரும் சீரின் முதலசை பெயர்பெறும்.

(தனிச்சொல்)
ஏனெனில் 

நேர்முன் நேரசை ஒன்றிடும் போது
நின்ற சீரது இயற்சீ ராகில்
நின்ற சீரின் ஈற்றசை நேரென
நின்றது தேமா புளிமா வாகுமே

அல்லது

நின்ற சீரது மூவசை யாகில்
நின்ற சீரின் ஈற்றசை நேரென
நின்றது நான்கில் ஒருகாய்ச் சீராம்
வருவது யாதொரு சீரென் றாயினும்
வரும்சீர் முதலசை நேரசை யாகுமே

இதனால்

நேர்முன் நேரசை ஒன்றுதல் குறிக்க
மாமுன் நேரென, காய்முன் நேரென
நின்றசீர் வருமசை நோக்கிக் குறிப்பரே.
தளைவாய் பாடில் ’முன்’எனும் சொல்லுக்
கெதிர்வரும் என்றே பொருள்கொள வேண்டுமே. ... 2

’நாராய் நாராய் செங்கால் நாராய்’
(தேமா தேமா தேமா தேமா )
எனவரும் செய்யுள் அடியின் தளைகளில்
நின்றசீர் மாச்சீர் வரும்சீர் நேர்முதல்
மாமுன் நேரென ஒன்றுதல் காண்க. ... 3

’கற்றதனால் ஆய’ எனும்சீர்த் தொடரில்
நின்றசீர் காய்ச்சீர் வரும்சீர் நேர்முதல்
காய்முன் நேரென ஒன்றுதல் காண்க. ... 4

நிரைமுன் நிரைவர ஒன்றுதல்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இயற்சீர் முன்நிரை யொன்றும் போது
நின்ற சீரது விளச்சீ ரென்றால்
வரும்சீர் முதலசை நிரையுடன் ஒன்றுதல்
விளம்முன் நிரைவர ஒன்றுத லென்பரே. ... 5

’பழம்படு பனையின்’ எனும்சீர்த் தொடரில்
நின்றசீர் விளச்சீர் வரும்சீர் நிரைமுதல்
விளம்முன் நிரையென ஒன்றுதல் காண்க. ... 6

நின்ற சீரது கனிச்சீ ரென்றால்
வரும்சீர் முதலசை நிரையுடன் ஒன்றுதல்
கனிமுன் நிரைவர ஒன்றுத லென்பரே. ... 7

(ஆசிரியத் தாழிசை)
’புனல்பொழிவன சுனையெல்லாம்’ எனும்சீர்த் தொடரில்
நின்றசீர் கனிச்சீர் வரும்சீர் நிரைமுதல்
கனிமுன் நிரையென ஒன்றுதல் காண்க. ... 8

நேர்நிரை முன்வர ஒன்றாமை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேர்முன் நிரைவரும் ஒன்றாமை குறிக்க
மாமுன்நிரை காய்முன்நிரை யெனும்வாய் பாடும்
நிரைமுன் நேர்வரும் ஒன்றாமை குறிக்க
விளம்முன்நேர் கனிமுன்நேர் யெனும்வாய் பாடும்
தளைகள் அறிய மிகப்பயன் படுமே. ... 9

(ஆசிரியத்துறை)
’அகர முதல’ எனும்சீர்த் தொடரில்
மாமுன் நிரையெனும் ஒன்றாமையும்
’ஒருநோக்கம் பகல்செய்ய’ எனும்சீர்த் தொடரில்
காய்முன் நிரையெனும் ஒன்றாமையும் காண்க. ... 10

’மலர்மிசை ஏகினான்’ எனும்சீர்த் தொடரில்
விளம்முன் நேரெனும் ஒன்றாமையும்
’வரைமூடுவ மஞ்செல்லாம்’ எனும்சீர்த் தொடரில்
கனிமுன் நேரெனும் ஒன்றாமையும் காண்க. ... 11

*****

No comments:

Post a Comment